×

பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் யார்?... வேற லெவல் ட்விஸ்ட் வைத்த கெஜ்ரிவால் - ஆடிப்போன காங்கிரஸ், பாஜக!

 

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி தலைநகர் டெல்லியை என்று கைப்பற்றியதோ அன்று முதல் வெற்றிமுகம் தான். காங்கிரஸின் கோட்டையாக திகழ்ந்தது டெல்லி. 2013 தேர்தலில் அந்தக் கோட்டையை லைட்டாக ஆட்டம் காட்டினார் கெஜ்ரிவால். இதனால் யாருமே எதிர்பாராவிதமாக அங்கு தொங்கு சட்டசபை உருவாக, பெரும் குழப்பங்களுக்கு மத்தியில் காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு தெரிவிக்க மைனாரிட்டி அரசை அமைத்தார் அவர். ஆனால் 49 நாட்களில் ஆம் ஆத்மிக்கும் காங்கிரஸுக்கும் உரசல்கள் ஆரம்பிக்க அது ராஜினாமாவில் வந்து நின்றது. உடனே குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.

அடுத்த தேர்தல் 2015ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்த தேர்தலில் மொத்தமாக டெல்லியை தன்வசமாக்கினார் கெஜ்ரிவால். ஆம் 70 தொகுதிகளில் 67இல் வென்று ஏகபோக பெரும்பான்மையுடன் ஆட்சிக்கட்டிலில் ஏறினார். அவருடைய ஆட்சி பிடித்ததோ அல்லது பாஜக மீதான வெறுப்போ தெரியவில்லை 2020ஆம் ஆண்டு தேர்தலில் 62 தொகுதிகளில் வென்று கெத்து காட்டியது. இந்த தேர்தல் வெற்றி தான் ஆம் ஆத்மிக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்தது. தங்களுக்கு தேசிய கட்சியாகும் அத்தனை தகுதியும் இருப்பதாக நம்பிக்கை பிறந்தது. அதன்படி தங்களின் ஆட்சி அதிகாரத்தை நாடு முழுவதும் விஸ்தரிக்க எண்ணியது.

அதற்கு முத்தாய்ப்பாக உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் என டெல்லிக்கு அருகில் உள்ள மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கின்றன. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே அதிரடி வாக்குறுதிகளைக் கொடுத்தும் அம்மாநிலங்களில் பேரணியில் கலந்துகொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார் கெஜ்ரிவால். இப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் மேலும் சில வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார். அவருடைய வியூகத்தை எதிர்கொள்ள காங்கிரஸும் பாஜகவும் திணறி வருகின்றன. அந்த வகையில் பஞ்சாப் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில் புதுமையைக் கையாண்டுள்ளார் கெஜ்ரிவால்.

ஆம் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி தலைவர் பக்வந்த் மான், மாநில பொறுப்பாளர் ராகவ் சதா ஆகியோர் "Janata chunegi apna CM" (முதல்வர் வேட்பாளரை மக்களே தேர்ந்தெடுக்கலாம்) என்ற பெயரில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளனர். அதன்படி, 70748 70748 என்ற போன் நம்பரை மக்கள் அழைத்து, தங்களுக்கு பிடித்தமான முதல்வர் வேட்பாளரை முன்மொழியலாம். ஜனவரி 17ஆம் தேதி மாலை வரை இந்த எண்ணுக்கு அழைத்து விருப்பமான முதல்வர் வேட்பாளரின் பெயரை பரிந்துரைக்கலாம்.

எத்தனையோ கட்சிகளில் தங்களது சொந்தக்காரர்களை முதல்வர் வேட்பாளர்களாக நியமிக்கிறார்கள். ஆனால் நாங்கள் அப்படி இல்லை. பக்வந்த் மான் மக்களுக்கு நெருக்கமானவர். என்னுடைய சகோதரர் போன்றவர். அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முடிவு செய்தோம். ஆனால், அவர் தான் மக்களே அதை தீர்மானிக்கட்டும் என்று கூறிவிட்டார். அவர் ஆசைப்பட்டதால் இவ்வாறு போன் மூலம் மக்கள் விருப்பத்தை தெரிவிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளோம்” என்றார். ஆம் ஆத்மியின் இந்த முடிவு பாஜக, காங்கிரஸ் கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போன் வசதி நிச்சயமாக ஆம் ஆத்மிக்கு மைலேஜை கூட்டும் என்பதால் அதை தகர்க்க என்ன செய்ய வேண்டும் என யோசித்து கொண்டிருக்கிறார்கள்.