×

மாதம் ஒரு முன்னாள் அதிமுக அமைச்சரே டார்கெட்! திமுகவின் மாஸ்டர் பிளான்

 

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு ஜூலை மாதம் முதல் மாதம் ஒரு முன்னாள் அமைச்சர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை நடத்திவருகிறது.

தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு அதிமுக அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்திவருகிறது. கடந்த 7 மாதங்களில் 5 அதிமுக அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி உள்ளனர். குறிப்பாக கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி முன்னாள்  அதிமுக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்து தமிழகம் முழுவதும் 26 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 25லட்சம் ரூபாய் பணம், காப்பீட்டு நிறுவனங்களில் பரிவர்த்தனை செய்யப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து ஆகஸ்டு 10ஆம் தேதி முன்னாள் அதிமுக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான 60 இடங்களில் சோதனையானது நடத்தப்பட்டது. அதில் 13லட்சம் பணம், 2கோடி வைப்பு தொகை, மாநகராட்சி டெண்டர், பத்திரப்பதிவு ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் செப்டம்பர் 16ஆம் தேதி முன்னாள் வணிகவரி மற்றும் பத்திர பதிவுதுறை அமைச்சரான கே.சி வீரமணிக்கு சொந்தமான 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது. அதில் 34லட்சம் பணம், அன்னிய செலாவணி டாலர் 1லட்சம், 9 சொகுசு கார்கள், 624 சவரன் தங்க நகைகள், 47கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளி பொருட்கள், 275 யூனிட் மணல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக அக்டோபர் 18ஆம் தேதி முன்னாள் அதிமுக சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கருக்கு சொந்தமான 50 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தியது. அந்த சோதனையில் 23லட்சம் பணம், 4.87கிலோ தங்கம், 136 கனரக வாகனங்கள், பதிவு சான்றிதழ்கள், பரிவர்த்தனை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

இந்த நிலையில் இன்று முன்னாள் அதிமுக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர், இதுவரை தொடர்ச்சியாக ஐந்து அதிமுக அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய நிலையில், இதுவரை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் அதிக இடங்களில் சோதனை நடைபெற்றது முன்னாள் அமைச்சர் தங்கமணி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் சோதனையில் 400க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர்.