×

"திமுக அரசே பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு" - அண்ணாமலை ஆவேசம்!

 

நீலகிரியில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மதுலிக்கா உள்ளிட்ட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்திருப்பது தேசியளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரடியாகவே அஞ்சலி செலுத்தினார். ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவியோ திருச்சியில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நேரில் வரவில்லை. அதற்குப் பதிலாக அவர் மனைவியுடன் ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்ற புகைப்படம் வைரலானது. முதல்வர் அஞ்சலி புகைப்படத்தையும் இதையும் ஒப்பிட்டு விமர்சனம் எழுந்தது.

தற்போது அதற்கு விளக்கமளித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மறுநாள் பட்டமளிப்பு விழா நடைபெற இருந்தது. இதனால் தான் ஆளுநரால் நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை. அது அவரின் தனிப்பட்ட முடிவு. இதில் தவறு இல்லை. இதை அரசியலாக்குவது தேவையில்லாதது” என்றார். அதேபோல பிபின் ராவத் இறப்பு குறித்து தவறாக கருத்து தெரிவித்த பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் கைது குறித்தும் அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கும் பதிலளித்த அவர், "திமுகவை சேர்ந்தவர்களும் இதுதொடர்பாக ட்வீட் செய்தனர்.

அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாரிதாஸ் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் பேசியதெல்லாம் அதை விட 100 மடங்கு மோசமான கருத்துகள். போலீசார் டிஜிபி கட்டுப்பாட்டிலேயே இல்லை. சைக்கிளில் செல்வதற்கும் செல்பி எடுப்பதற்கும் தான் இங்கு டிஜிபி உள்ளார். திமுகவின் மாவட்ட செயலாளர்களும் ஐடி பிரிவினரும் தான் போலீசாரை கட்டுக்குள் வைத்துள்ளனர். மாரிதாஸ் கைதுக்குப் பின்னால் இருப்பவர்கள் முழுக்க முழுக்க திமுக ஐடி பிரிவினர் தான். திமுகவை புரமோட் செய்ய இவர்கள் காவல் துறையைப் பயன்படுத்துகிறார்கள். 

உரிய நடவடிக்கை எடுக்க தவறும் எதற்கு டிஜிபி போஸ்ட் இங்கு எதற்கு? டிஜிபி என்பது வெறும் அலங்கார பதவியாக இருக்கிறது. ஒரு அரசியல் கட்சியாக இதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. திமுக அரசு ஒரு விஷயத்தை மறந்துவிடக் கூடாது. குற்றவியல் சட்டம் என்பது இந்தியா முழுமைக்கும் பொருந்தும். திமுக ஐடி பிரிவினர் பதிவிடும் புகார்களுக்கு நாட்டில் எங்கு வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். இதை திமுக அரசு மறந்துவிடக்கூடாது. முரசொலிக்குச் சந்தா கொடுத்தவர்கள், திமுக சார்பில் போட்டியிட்டவர்களுக்குத் தான் அரசில் முக்கிய பதவிகள் அளிக்கப்படுகிறது. எங்கள் கட்சி பொறுமையாக இருக்கிறது. ஆனால் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு” என்றார்.