×

"என்ன உறக்கம் போச்சா... உண்மையான சௌகிதார் எங்க மோடி தான்" - அண்ணாமலை பளீச்!

 

நீதிமன்றங்களின் வாயிலாக மக்களுக்கு எதாவது நல்லது நடந்தால், அதற்கு "நாங்கள் தான் வாங்கி கொடுத்தோம்; எங்களுக்கு கிடைத்த வெற்றி" என ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் பெயரில் எழுதிக் கொள்வார்கள். பாமகவின் டிரேட்மார்க் வாசகத்தை கேள்விப்பட்டிருப்பீர்கள். எது நடந்தாலும் "இது பாமகவுக்கு கிடைத்த வெற்றி” என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸும் இளைஞரணி தலைவர் அன்புமணியும் அறிக்கை வெளியிடுவார்கள். தற்போது அவர்களது பாணியை மற்ற கட்சிகளும் பின்பற்ற தொடங்கியுள்ளன. 27% இடஒதுக்கீடே அதற்கு உதாரணம்.

இந்த விவகாரத்தை ஆரம்பத்தில் இருந்தே எழுப்பியது திமுக தான். ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன்பே திமுக எம்பி வில்சன் நாடாளுமன்றத்தில் பேசினார். ஆனால் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு கொடுக்க கிஞ்சித்தும் மத்திய அரசுக்கு விருப்பமில்லை. நாடாளுமன்ற அவைகளிலும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வாயிலாகவும் பல்வேறு முறை வலியுறுத்தியும் கண்டுகொள்ளவில்லை. இதன்பின் உயர் நீதிமன்றத்தை நாடியது திமுக. உயர் நீதிமன்றம் 27% இடஒதுக்கீடு வழங்குமாறு தீர்ப்பளித்தது. ஆனால் அப்போதும் கூட மத்திய பாஜக அரசு மதிக்கவில்லை.

அதன்பின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது திமுக. இதையடுத்தே பிரதமர் 27% இடஒதுக்கீடு வழங்குகிறோம் என அறிவித்தார். அப்போதே இதை தன் கணக்கில் எழுதிக் கொண்டது பாஜக. தற்போது உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்துள்ளதால் இப்போதும் பாஜக நாங்கள் தான் வான்டடாக இடஒதுக்கீடு கொடுத்தோம் என்ற ரேஞ்சில் பேசிக் கொண்டிருக்கின்றனர். இன்னொரு புறம் அதன் கூட்டணிக் கட்சியான அதிமுகவும் தங்களுக்கு கிடைத்த வெற்றி என சொல்கிறது. அதைக் கூட விட்டுவிடலாம். அவர்களும் வழக்கு தொடர்ந்திருந்தார்கள்.

பிள்ளையார் சுழி போட்டதிலிருந்து தீர்ப்பு வரும் வரை திமுகவின் உழைப்பு அபரிமிதமானது. ஆனால் பாஜகவினர் மோடி தான் 27% இடஒதுக்கீடு கொடுத்ததாக பேசிவருகின்றனர். இதனையொட்டி அண்ணாமலை வெளியிட்டிருக்கும் அறிக்கையும் அதையே தான் கூறுகிறது. அவரின் அறிக்கையில், "2015-ல் சலோனி குமார் தாக்கல் செய்த ரிட் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, நீதிமன்றம் ஒப்புதல் அளித்தால் 27% இடஒதுக்கீடு வழங்க தயாராக இருப்பதாக எழுத்துப்பூர்வமாக கூறியது. 

எனவே, 2015-ம் ஆண்டிலேயே பாஜக அரசு தனது கொள்கை முடிவை தெளிவாக எடுத்துரைத்துவிட்டது. தற்போது யார் யாரோ உறக்கம் கலைந்து, தங்களால்தான் இடஒதுக்கீடு கிடைத்தது என்று பேசுவது வேடிக்கையாக உள்ளது. 2004-2014 வரை மத்தியில் காங்கிரஸ்-திமுக ஆட்சியில் இருந்தபோதே, இதை செய்திருக்கலாமே. வழக்கு நிலுவையில் இருக்கும்போதே மத்திய அரசு தனது கொள்கை முடிவை நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அறிவித்ததால், இந்த இடஒதுக்கீட்டை நீதிமன்றத்தின் அங்கீகாரத்துடன் கட்டமைத்த முழு பெருமையும் பாஜகவுக்கு மட்டுமே உண்டு. பிரதமர் மோடியே உண்மையான சமூக நீதி காவலர் (சௌகிதார்)" என்று குறிப்பிட்டுள்ளார்.