பாமகவின் தலைவராகிறார் அன்புமணி
பாமகவின் தலைவர் ஆகிறார் அன்புமணி என்றும், விரைவில் அதற்கான நியமனம் நடைபெறும் என்றும், பொதுக்குழு கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தி தலைவராக அவர் தேர்வு செய்யப்பட இருக்கிறார் என்றும் கட்சி வட்டாரத்தில் தகவல் கசிகிறது.
பாமகவின் நிறுவனராக உள்ளார் ராமதாஸ் . அக்கட்சியின் தலைவர் ஜிகே மணி. அவர் பாமக சட்டமன்ற குழு தலைவராகவும் உள்ளார். பாமகவின் இளைஞரணி தலைவராக உள்ளார் அன்புமணி.
அன்புமணி ராமதாசை முதல்வர் நாற்காலியில் உட்கார வைக்க வேண்டும் என்று ராமதாஸ் தீவிரமாக இயங்கி வருகிறார். மாற்றம் முன்னேற்றம் என்று அதி தீவிர பிரச்சாரத்தில் இறங்கிய, தனித்து களமிறங்கிய பாமக, கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைத்து ஐந்து எம்எல்ஏக்களை மட்டும் சட்டசபைக்கு அனுப்பியிருக்கிறது .இதனால் ஆத்திரம் கொண்ட ராமதாஸ், நமது சமூகத்தில் இத்தனை பேர் இருந்தும் வெறும் 5 எம்எல்ஏக்கள் தான் இருக்கிறார்கள். உள்ளாட்சி தேர்தலில் இதைவிடவும் மோசமான நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
அடுத்து வரும் தேர்தலில் பாமக ஆட்சியைப் பிடிக்க வேண்டும். அதற்கு தனித்து தான் போட்டியிட வேண்டும். அன்புமணி ராமதாஸ் தலைமையில் தான் அந்த தேர்தலை சந்திக்க வேண்டும். அவரை முதல்வர் நாற்காலியில் உட்கார வைக்க வேண்டும். அந்த எண்ணத்தில் உழைக்கின்றர்களுக்குத்தான் மாவட்ட செயலாளர் பொறுப்பு, ஒன்றிய செயலாளர் பொறுப்பு வழங்கப்படும் என்று கறார் காட்டி வருகிறார் ராமதாஸ் என்றும், அதற்காக தொடர் ஆய்வு கூட்டங்கள் நடத்தி அது குறித்து பேசி வருகிறார் என்றும் கட்சி வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது.
அடுத்த மாதம் இறுதியில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. அந்தக் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தி முறைப்படி அன்புமணியை தலைவராக தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அவர் தலைவராக தேர்வு செய்யப்படும் சமயத்தில் தற்போதைய தலைவராக இருக்கும் ஜிகே மணிக்கு அதற்கு இணையான பொறுப்பு வழங்கப்படும் என்றும் கட்சி வட்டாரத்தில் இருந்து தகவல் கசிகிறது.