×

அவதூறாக பேச்சு : அமைச்சர் சி.வி.சண்முகம் மீது அமமுகவினர் போலீசில் புகார்!

டிடிவி தினகரன் குறித்து அவதூறாக பேசியதாக அமமுகவினர், அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு எதிராக போலீசில் புகாரளித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி காவல் நிலையத்தில் அமமுகவினர் அமைச்சர் சி.வி சண்முகத்திற்கு எதிராக புகார் ஒன்றை அளித்தனர். அதில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை அவதூறு செய்யும் வகையில் அமைச்சர் சண்முகம் பேசி வருவதால் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. அமமுக ஒன்றிய செயலாளர் ராஜேந்திர பூபதியும், நகர செயலாளர் காமராஜூம் இந்த புகாரை
 

டிடிவி தினகரன் குறித்து அவதூறாக பேசியதாக அமமுகவினர், அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு எதிராக போலீசில் புகாரளித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி காவல் நிலையத்தில் அமமுகவினர் அமைச்சர் சி.வி சண்முகத்திற்கு எதிராக புகார் ஒன்றை அளித்தனர். அதில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை அவதூறு செய்யும் வகையில் அமைச்சர் சண்முகம் பேசி வருவதால் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. அமமுக ஒன்றிய செயலாளர் ராஜேந்திர பூபதியும், நகர செயலாளர் காமராஜூம் இந்த புகாரை அளித்தனர்.

அண்மையில் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சண்முகம், அதிமுகவை கைப்பற்றுவோம் என சசிகலாவும் தினகரனும் கூறி வருகிறார்கள். சசிகலாவை முதலில் தினகரனிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். தினகரன் ஒரு ஓபன் செல். சசிகலா முதலில் அவரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு பிறகு, அதிமுகவை காப்பாற்றலாம். நான் நிதானமா பேசுறேனான்னு தினகரன் கேட்கிறார். கூவத்தூரில் எனக்கு மட்டுமில்ல.. எல்லாருக்கும் தினகரன் தான் ஊத்தி கொடுத்தார் என்று கூறியிருந்தார்.

அமைச்சர் சி.வி.சண்முகத்தின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பிய நிலையில், அமமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அமைச்சர் சண்முகம் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.