×

"மோடி பைத்தியமாயிட்டாரு" - அடப்பாவமே அமித் ஷாவே இப்டி சொல்ட்டாரே?... தடதடக்கும் அரசியல் களம்! 

 

மேகலாயா ஆளுநர் சத்யபால் மாலிக் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் அண்மையில் பிரதமர் மோடியைச் சந்தித்திருக்கிறார். அப்போது விவசாயிகள் போராட்டம் குறித்து பேசியிருக்கிறார். இதுதொடர்பாக பரவி வரும் வீடியோவில், "நான் அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தேன். விவசாயிகள் இறப்பு குறித்து பேசினேன். அவரிடம் விவசாயிகள் போராட்டத்தில் 500 விவசாயிகள் இறந்துவிட்டனர் என்றேன். அதற்கு அவர் ஏதேச்சதிகார ஆணவத்துடன் "அவர்கள் எல்லோரும் எனக்காகவா இறந்தார்கள்?" என்று கேட்டார். 

நான் அவரிடம் "ஆமாம், நீங்கள் மன்னராக இருப்பதால் அவர்கள் இறந்தார்கள்" என்று கூறினேன். அவர் உடனே நீங்கள் அமித் ஷாவை போய் பாருங்கள் என்றார்.நானும் அமித் ஷாவை பார்த்தேன். மோடி சொன்னதை சொன்னேன். அவரோ, "நாட்டு மக்கள் பிரதமர் மோடியை பைத்தியமாக்கிவிட்டார்கள். நீங்கள் கவலைப்பட வேண்டாம். என்றாவது ஒருநாள் சுயநினைவுக்கு அவர் வருவார்” என்று என்னிடம் கூறினார். நான் இப்படி பேசுவதால் எனக்கு பணியிட மாறுதல்கள் நடக்கும். இருந்தாலும் அதைப் பற்றி எந்தக் கவலையும் எனக்கில்லை. நான் எப்போதும் விவசாயிகள் பக்கம்தான் ” என சத்யபால் மாலிக் பேசியிருந்தார்.  

அவர் பாஜக அரசுக்கு எதிராகப் பேசுவது இது முதன்முறை அல்ல. அவர் பல முறை விமர்சித்திருக்கிறார். 2018ஆம் ஆண்டு காஷ்மீர் சட்டப்பேரவையை மத்திய பாஜக அரசு குதிரை பேரம் நடத்தி கலைத்ததாக கடும் விமர்சனம் செய்தார். பின்னர் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை அவர் விமர்சித்தார். இதனால் கோவாவுக்கு ஆளுநராக மாற்றப்பட்டார். கோவாவில் பாஜக முதல்வராக இருக்கும் பிரமோத் சாவந்த்தை விமர்சித்த பின்னர் மாலிக் மேகலாயா ஆளுநராக மாற்றப்பட்டார். இதற்குப் பின்னர் அவர் எங்கே மாற்றப்படப் போகிறார் என்று தெரியவில்லை.