×

"யோகிக்கு உங்க ரூல்ஸ் செல்லாதா?" - தேர்தல் கமிஷனுக்கு அகிலேஷ் சரமாரி கேள்வி!

 

உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கும் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. மார்ச் 7ஆம் தேதி முடிந்த பின் 10ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. அங்கே தேர்தல் நடத்த விதிமுறைகள் ஜனவரி 15ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன. அதன்படி கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் நேரடி பிரச்சாரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் வழியாகவே அரசியல் கட்சித் தலைவர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இருப்பினும் வேட்பாளர்கள் விதிமுறைகளை மீறி செயல்படுவதாக புகார் எழுந்து வருகிறது. கோவிட் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதற்காக கடந்த வாரம் சமாஜ்வாதி கட்சிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அகிலேஷ் யாதவ், இன்று பாஜக எம்எல்ஏ ஒரு சாலை பேரணி நடத்தும் வீடியோவை ட்வீட் செய்துள்ளார். விதிகளை மீறி ஆளும் கட்சி செயல்பட்டால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கோவிட் நெறிமுறைகளை மீறும் அனைத்து தரப்பினருக்கும் எதிராக நடவடிக்கை சமமாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், "சமாஜ்வாதி கட்சியின் நிகழ்ச்சிகளுக்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் சில நாட்களே பதவியில் இருக்கக் கூடிய முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. அவர் வரும் தேர்தலில் தோல்வியடைவது உறுதி. இதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அவர் அம்ரோஹாவில் நிறுத்தியுள்ள பாஜக வேட்பாளரின் இந்த செயல்பாடு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கேலி செய்வதாக உள்ளது. தேர்தல் ஆணைம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?’’ என வினவியுள்ளார்.