×

ரூ.109 கோடி கொட்டியும் 47 தொகுதி தான் வெற்றி- அதிமுக தொண்டர்கள் விரக்தி

 

சட்டமன்றத் தேர்தலில், ‘பிரமான்யா ஸ்ட்ரேட்டஜி கன்சல்டிங்’ நிறுவனத்துக்காக அதிமுக ரூ.109.61 கோடியும், 'பென்’ நிறுவனத்துக்காக திமுக ரூ.74.94 கோடியும் செலவிட்டுள்ளன.தேர்தல் உத்தி மற்றும் பிரச்சார் ஆலோசனைகளுக்காக இரண்டு பிரதானக் கட்சிகளும் இவ்வளவு பெரிய தொகையை செலவழித்துள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள நடந்து முடிந்த 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் , அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் தேர்தல் செலவு தொடர்பான கணக்கு தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் மொத்தமாக ரூ.109 கோடியே 61 லட்சத்து 81 ஆயிரத்து 982 செலவிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பகுதி தொகை விளம்பரங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. நாளிதழ்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள், சமூக வலைதள பிரசாரம் மற்றும் விளம்பர நிறுவனங்களுக்காக ரூ.103 கோடியே 98 லட்சம் செலவிடப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களுக்காக ரூ.1 கோடியே 28 லட்சம் செலவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உள்ளிட்ட பிரசாரகர்களுக்கு ரூ.17.37 லட்சம் வழங்கப்பட்டதாகவும் கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசாரத்துக்காக மட்டும் ரூ.1.75 லட்சம் செலவிடப்பட்டதாகவும், அவரது பிரசார வாகனத்துக்கான டீசலுக்கு ரூ.4.14 லட்சம் செலவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களுக்கான ஆவணங்கள், படிவங்கள் உள்ளிட்ட தேர்தல் பணிகளுக்காக ரூ.4.11 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், அதிமுகவின் கையிருப்பு நிதி ரூ.296 கோடியாக இருப்பதாகவும், இதில் கரூர் வைசியா வங்கியில் மட்டும் ரூ.271 கோடி இருப்பதாகவும் கணக்கு விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.