செங்கல்பட்டில் அரசியல் அதிர்வு... த.வெ.க.வில் இணைய தயாராகும் அதிமுக நிர்வாகிகள்
மதுராந்தகம் முன்னாள் எம்எல்ஏ மரகதம் குமரவேல் தலைமையில் செங்கல்பட்டு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் த.வெ.க.வில் இணையும் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள், அதிமுகவை கடுமையாக பாதித்திருக்கிறது. அதிமுகவின் 54 ஆண்டுகால அரசியலில், எதிர்க்கட்சி அந்தஸ்தை அதிமுக இழந்திருப்பது இது இரண்டாவது முறை. அதுமட்டுமல்லாது அதிமுகவின் வாக்கு வங்கி பலமாக இருக்கும் கொங்கு மண்டலத்திலும் அக்கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதெல்லாம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தோல்வி என்றுதான் கணக்கில் வரும். எனவே எடப்பாடி கடும் அப்செட்டில் இருக்கிறார். இது போதாது என, சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெகவுக்கு ஆதரவளித்தது, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி தலைமையில் புதிய அணி உருவானது, 4 எம்எல்ஏ ராஜினாமா செய்தது என அடுத்தடுத்த ஷாக், எடப்பாடியை ஆட்டம் காண வைத்திருக்கிறது. என்னதான் எஸ்.பி.வேலுமணியும், தங்கமணியும் தங்கள் செயலுக்கு மன்னிப்பு கேட்டிருந்தாலும், கட்சியில் அவர்கள் வகித்த பதவியை திரும்ப தரும் எண்ணத்தில் எடப்பாடி இல்லை. எனவே, தவெகவில் இணைந்துவிடலாமா என்று மணி டீம் யோசித்துவருகின்றனர். இதேபோல் சென்னை மாவட்ட செயலாளர்களான ராஜேஷ், தி.நகர் சத்யா, விருகை ரவி உள்ளிட்டோர் திமுகவில் இணைய காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் மதுராந்தகம் முன்னாள் எம்எல்ஏ மரகதம் குமரவேல் தலைமையில் செங்கல்பட்டு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் த.வெ.க.வில் இணையும் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. த.வெ.க. தலைவர் விஜய் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. செங்கல்பட்டு மாவட்ட அரசியலில் முக்கிய திருப்புமுனையாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது. இதேபோல் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி அதிமுக முன்னாள் அமைப்பாளர் சி.த.செல்லப்பாண்டியன், சிவகங்கை மா.செ செந்தில்நாதன் தவெகவில் இணைய இருக்கின்றனர். இதனால் எடப்பாடி பழனிசாமி கடும் அதிர்ச்சியைடந்திருக்கிறார்.