அதிமுக உட்கட்சி தேர்தலில் மோசடியாம் - ரத்து செய்யக்கோரி வழக்கு
அதிமுகவின் உட்கட்சி தேர்தலை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் அக்கட்சியின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி.
கட்சி விதி 30-ன் படி அதிமுக உட்கட்சித்தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படவேண்டும் என்கிற அடிப்படையில் டிசம்பர் 7 ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடக்கிறது. என அறிவிப்பு வெளியானது. 3.12.2021 மற்றும் 4.12.2021 வேட்புமனுத்தாக்கல் என்றும், ஏழாம் தேதியன்று தேர்தல் என்றும், எட்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவு அறிவிப்பு என்றும் அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்தத் தேர்தலில், தேர்தல் ஆணையாளர்கள் என்று பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் இருவரைத்தான் தலைமைக்கழகம் அறிவித்திருக்கிறது. அப்படி இருக்கும்போது, பொன்னையனுக்கு இந்த தேர்தல் நடைபெறும் விபரமே தெரியவில்லை. தேர்தல் ஆணையருக்கே தெரிவிக்காமல் இந்த அறிவிப்பை அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுவிட்டார்கள் என்ற சலசலப்பு எழுந்தது.
அதிமுகவின் இந்த தேர்தல் அறிவிப்பில் ஏகப்பட்ட முரண்பாடுகள் உள்ளதாக புகார்கள் எழுந்திருக்கின்றன. கட்சியின் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட முடிவு பொதுக்குழுவில் வைக்கப்பட்டால் தான் முழுமை பெறும். அப்படி இருக்கும்போது, பொதுக்குழுவில் வைக்காமல் நேரடியாக முடிவை அமல்படுத்துவதன் நோக்கம் என்ன? என்று கேட்கிறார் கே.சி.பழனிச்சாமி.
தேர்தல் என்றால் நோட்டீஸ் பீரியட் இருபத்தி ஒரு நாள் இருக்கணும். வாக்காளர் பட்டியல் வெளியிடணும். வாக்காளர்கள் யார் என்பதை முதலில் அறிவிக்க வேண்டும். அப்புறம் பட்டியல் வெளியிட வேண்டும். இதை எல்லாம் வெளியிடாமல் எப்படி தேர்தல் நடத்துவார்கள்? யாரும் போட்டியிட இல்லையென்றால், இருக்கக் கூடாது இந்த தேதி அறிவித்து விட்டோம். யாரும் போட்டியிடவில்லை. இவர்கள் இருவரும் மட்டுமே போட்டியில் இருக்கிறார்கள் என்பதால் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள் என்று தற்போது இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி- ஓ. பன்னீர்செல்வம் இருவரை மட்டுமே அறிவிக்க முயற்சிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார் கே. சி. பழனிச்சாமி.
அதிமுகவில் 1 கோடி வாக்காளர்கள் இருப்பதாக சொல்கிறார்கள். தேர்தலில் ஒன்றரை கோடி தொண்டர்கள் எங்கே வாக்களித்து இருக்கிறார்கள். அவ்வளவு பேரும் சென்னையில் வாக்களிப்பார்கள் அல்லது மாவட்டங்களில் வாக்களிக்க என்ன ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது? என்ற கேள்வியையும் எழுப்பும் பழனிச்சாமி, இந்த மோசடியான தேர்தலை நிறுத்தக்கோரி, தேர்தலை நடத்தினால் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் நடத்தவேண்டும் என்றும் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இன்று பிற்பகல் 2.30க்குள் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள உள்ளது இந்த சிவில் வழக்கு.