“செங்கோட்டையனுக்கு தனிப்பட்ட செல்வாக்கு இல்லை... 25,000 ஓட்டு வாங்குறதே கஷ்டம்”
2026ல் கோபி தொகுதியில் செங்கோட்டையன் போட்டியிட்டால் 25 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெறுவார் என கே.கே.செல்வம் உறுதியளித்துள்ளார்.
செங்கோட்டையன் அண்ணன் மகன் கே.கே.செல்வம் திமுகவில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து இன்று சென்னையில் பசுமை வழிச்சாலையில் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருடன் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நபர்கள் அவருடன் அதிமுகவில் இணைந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்வம், “52 ஆண்டுகளாக எங்கள் குடும்பம் அதிமுக ஆதரவாக தான் இருந்து வருகிறோம். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் தனது தந்தை கே ஏ கே தான். எங்கள் மீது பழி சொல்லி கட்சியில் இருந்து நீக்கினார். அதனால் நான் திமுகவில் இணைந்தேன். செங்கோட்டையன், அதிமுகவிற்கு துரோகம் செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளார். 2006, 2011, 2016ல் எங்கள் ஆதரவு இல்லாமல் இருந்தால் வெற்றி பெற்றிருக்க மாட்டார். அதேபோல 2026ல் கோபி தொகுதியில் யார் வேட்பாளராக அறிவித்தாலும் அவர் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெறுவார்.
செங்கோட்டையன் தனிப்பட்ட முறையில் இதுவரை கோபி தொகுதிக்கு எந்த தனித்துவ திட்டத்தையும் கொண்டு வந்தது இல்லை. ஈரோடு, கோபி பகுதியில் மட்டும் செங்கோட்டையனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டுள்ளனர். அரசியல் கத்துக்குட்டியான விஜய்யுடன் இணைந்து ஈரோட்டை தவெகவின் கோட்டையாக மாற்றுவேன் என கூறுகிறார். ஈரோடு என்றுமே அதிமுகவின் கோட்டை தான். செங்கோட்டையன் இல்லை என்பதால் அதிமுக பலவீனமாகும் என்று கூறுவது உண்மையல்ல. 2026ல் செங்கோட்டையன் அதே கோபி தொகுதியில் போட்டியிட்டால் 25 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெறுவார். அவருக்கு தனிப்பட்ட செல்வாக்கு இல்லை” எனக் கூறினார்.