×

ஈரோடு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் எந்த சின்னத்தில் நிற்கிறார்?- புகழேந்தி பதில்

 

ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா, உடல்நலக்குறைவால் அண்மையில் உயிரிழந்தார். 

இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.  இதன் பின்னர் இடைத்தேர்தல் தேதி எந்த நேரமும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில்,  தேர்தல் தேதியினை இன்று அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.   பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும்,  வாக்கு எண்ணிக்கை மார்ச் மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, “ஓபிஎஸ் உத்தரவிட்டால் இரட்டை இலையில் நிற்ப்போம். ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓபிஎஸ் இல்லாமல் எந்த தேர்தலிலும் அதிமுகவால் வெற்றிப்பெற முடியாது. எடப்பாடி பழனிசாமிக்கு சரித்திரம் கிடையாது. இரட்டை இலை எங்கள் சின்னம். அதன் உரிமையாளர் ஓ.பன்னீர்செல்வம். எனவே அந்த சின்னத்தை யாரும் உரிமை கொண்டாட முடியாது. தற்போது உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளர் எனக் கூறுவது தொடர்பான வழக்கு தான். அந்த வழக்குக்கும் சின்னத்துக்கும் தொடர்பு இல்லை.அதிமுக சின்னம் தொடர்பான வழக்கு எங்கேயுமே இல்லை. அதிமுக சின்னத்தை பொருத்தவரை ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக தான் தீர்ப்பு இருக்கிறது. தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தின் உரிமையாளராக ஓ.பன்னீர்செல்வத்தை தான் அங்கீகரித்து இருக்கிறது." என்றார்.