×

தமிழக அரசியல் களத்தில் உருவான புதிய கூட்டணி 

 

 

திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்றாக பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டாலும், அவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

இப்படிப்பட்ட சூழவில்தான், தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பமாக, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் மற்றும் வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவை ஒன்றிணைந்து புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த நகர்வு வரும் சட்டமன்ற இடைத்தேர்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை, அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய டாக்டர் கிருஷ்ணசாமி, அது தோல்வியில் முடிந்ததால் தனித்து போட்டியிட்டு பின்னடைவை சந்தித்தார். அதேபோல், திமுக கூட்டணியில் இருந்த வேல்முருகன் வெளியேறி தனித்துப் போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சி வழக்கம்போல தனித்தே களம் கண்டது.

இந்தத் தேர்தலில், விஜய் ஏற்படுத்திய அலை மற்றும் மக்கள் செல்வாக்கின் காரணமாக திமுக, அதிமுக ஆகிய 2 ஆலமரக் கட்சிகளும் கணிசமான பின்னடைவை சந்தித்தன. இதனால் மற்ற சிறு கட்சிகளின் வாக்கு வங்கியும் செல்வாக்கும் தேர்தலில் எடுபடவில்லை. இந்தத் தோல்விகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டுள்ள சீமான், கிருஷ்ணசாமி மற்றும் வேல்முருகன் ஆகியோர், சிதறியுள்ள வாக்குகளை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளனர். இதன் விளைவாக, தங்களுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகளை களைந்து, வரவிருக்கும் இடைத்தேர்தலில் ஒன்றாகக் களம் காணத் திட்டமிட்டுள்ளனர். இவர்களுடன் பல்வேறு சிறு அமைப்புகளும் இணைந்திருப்பது கூட்டணியின் பலத்தை அதிகரிக்க செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசியல் களத்தில் இந்த புதிய கூட்டணி உருவாகியிருப்பது, வரும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அனைத்து தரப்பு கட்சிகளுக்கும் ஒரு சவாலாகவே பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகள் தங்களது வியூகங்களை வகுத்து வரும் நிலையில், இந்த 3ம் அணியின் வருகை இடைத்தேர்தல் முடிவுகளில் எந்த அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.