×

அதிமுவில் எழுந்துள்ள புது சர்ச்சை! குழப்பத்தில் நிர்வாகிகள்

 

தமிழ்நாடு உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனு படிவத்தில் கையெழுத்து இடப்போவது யார்? என்ற புதுசர்ச்சை அதிமுகவில் எழுந்துள்ளது. 


தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள  இரண்டு மாவட்ட கவுன்சிவர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாநகராட்சி கவுன்சிலர், 2 நகராட்சி கவுன்சிலர், 8 பேரூராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட  510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 
இந்தப் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய திங்கட்கிழமை (ஜூன்27) கடைசிநாள் ஆகும். இதன்படி நாளை மாலை 5 மணிக்குள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்.  மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், நகராட்சி மற்றும்  மாநகராட்சி கவுன்சிலர்  உள்ளிட்ட 34 பதவியிடங்ளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. 

இந்த பதவிகளுக்கு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அந்த கட்சிகளின் சின்னங்களை ஒதுக்கீடு செய்ய ஏ மற்றும் பி என்ற இரண்டு படிவங்களை சமர்பிக்க வேண்டும். இந்த படிவங்களில் சம்பந்தபட்ட கட்சியின் சார்ந்தவர்களின் தலைவர்கள் கையெழுத்து இட வேண்டும். அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்ட பின்னர்  ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தான் இந்த படிவங்களில் கையெழுத்து இட்டுவந்தனர்.  தற்போது அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி சர்ச்சையினால், ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளே செல்லாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்த நிலையில் இந்த படிவங்களில் யார் கையெழுத்து இடுவார்கள் என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் வரும் 30ம் தேதிக்குள் ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்தைப் பெற்று வேட்புமனுக்களை சமர்பிப்பார்களா அல்லது மாட்டார்களா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.