×

"பொய் பிரச்சாரம்.. தமிழினத்திற்கு பேரழிவு" - மத்திய அரசு மீது சீறிய வேல்முருகன்!

 

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பேரழிவை ஏற்படுத்தும் அபாயம் உள்ள கூடங்குளம் அணுவுலையை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும் என்பது தான், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் மற்றும் மக்களின் கோரிக்கை. இக்கோரிக்கையை முன் வைத்துதான், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் இடிந்தகரையோடு நிற்காமால் தமிழ்நாடு தழுவியதாக மாறியது. ஆனால் மக்களின் போராட்டத்தை மத்திய அரசு மதிக்கவில்லை.

கூடங்குளம் அணுஉலை மிகவும் உயர்தரத் தொழில்நுட்பத்தில் நிறுவப்பட்டுள்ளது, பாதுகாப்பானது என்று தொடர்ந்து பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டது. அதே நேரத்தில், கூடங்குளம் போன்ற அணுவுலைகளிலிருந்து வரக்கூடிய அணுக்கழிவுகளை கையாள்வதற்கான தொழில்நுட்பம் இந்தியாவிடம் இல்லை என்பதையும் ஏற்றுக்கொள்ளும் ஒன்றிய அரசு, கூடங்குளம் அணுமின் நிலையத்தை விரிவுப்படுத்தும் பணியிலேயே அதிக கவனம் செலுத்தி வருவது அதிர்ச்சி அளிக்கிறது.

அதாவது, கூடங்குளத்தில் 1 மற்றும் 2-வது உலைகளில் இருந்து வெளியாகும் அணுக் கழிவுகளை உலைக்கு அருகிலேயே, அணு உலைக்கு அப்பால் எனும் சேமிப்பு வசதியை ஏற்படுத்தி சேமிக்க தேசிய அணுமின் கழகம் திட்டமிட்டிருந்தது. இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெற பொது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் 2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்தது. அரசியல் கட்சிகள், பொதுமக்கள், அமைப்புகளின் எதிர்ப்பால் இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இச்சூழலில், 3 மற்றும் 4 உலைகளின் கட்டுமானப் பணியுடன் சேர்த்தே அவ்வுலைகளில் உண்டாகும் அணுக்கழிவுகளை உலைக்கு அருகாமையிலே சேமித்து வைப்பதற்கான அணு உலைக்கு அப்பால் (Away from Reactor) வசதியை கட்டமைக்கும் நடவடிக்கைகளை தேசிய அணுமின் கழகம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக, பிப்ரவரி 24ம் தேதிக்குள் நிறுவனங்கள் தங்கள் ஒப்பந்தப் புள்ளிகளை இணையம் வாயிலாக தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய அணுமின் கழகம் அறிவித்துள்ளது.

கூடங்குளம் அணு உலைகளில் வெளியாகும் கழிவுகளை கூடங்குளத்திலேயே சேமித்து வைக்க அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் வழங்கிய உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்து வரும் நிலையில், 1,2,3,4 உலைகளில் இருந்து வெளியாகும் கழிவுகளை சேமித்து வைப்பதற்கான Away from Reactor வசதியை கட்டமைக்கும் நடவடிக்கைகளை தேசிய அணுமின் கழகம் மேற்கொண்டு வருவது கண்டனத்துக்குரியது. அணுக் கழிவுகளை மீண்டும் ரஷ்யாவிற்கே அனுப்ப வேண்டும் என்பது தான் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு. 

அதுகுறித்து சிந்திக்காத தேசிய அணுமின் கழகம், கூடங்குளத்தில் அணுக்கழிவுகளை சேமித்து வைக்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதற்காக தேசிய அணுமின் கழகம் மேற்கொண்டு வரும் பணிகளை தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு, மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். நிரந்தரமாக அணுக்கழிவுகளை சேமித்து வைக்க உலக நாடுகளே திணறி வரும் சூழலில், கூடங்குளம் அணு உலைகளை இழுத்து மூட வேண்டும் என்பது தான் தமிழர்களின் ஒற்றைக் கோரிக்கை. 

அதை விடுத்து, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதற்காக பணிகளை மேற்கொண்டால், ஒன்றிய அரசுக்கு எதிரான மீண்டும் ஒரு மாபெரும் போராட்டம் நடக்கும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெரிவித்துக் கொள்கிறது. கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பது அறிவியலுக்கு எதிரானது. வளர்ச்சிக்கு எதிரானது என்ற இந்திய மத்திய அரசின் பொய் பிரச்சாரத்தையும், கருத்தையும் புறம் தள்ளி, தமிழினத்திற்குப் பேரழிவை ஏற்படுத்தும் கூடங்குளம் அணு உலையைத் தடுத்து நிறுத்த தமிழர்கள் ஒன்று திரள வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.