×

மதவெறியை மாநில அரசு பொறுத்துக்கொள்ளாது... உத்ரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உறுதி

 

உத்ரகாண்டில் மதவெறியை மாநில அரசு பொறுத்துக்கொள்ளாது என அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டெய்லராக இருந்தவர் கண்ணையா லால். இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக பேஸ்புக்கில் பதிவு ஒன்றை எழுதியிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், நுபுர் சர்மாவின் புகைப்படத்தை முகநூல் முகப்புப் படமாக வைத்து இருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இரண்டு இஸ்லாமியர்களால் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார். இது சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதய்பூர் டெய்லர் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் தப்பியோட முயன்ற போது ராஜஸ்தான் போலீசார் அவர்களை கைது செய்தனர். உதய்பூர் டெய்லர் படுகொலை தொடர்பாக உத்ரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: உத்ரகாண்ட் மாநிலத்தில் மதவெறியை மாநில அரசு பொறுத்துக்கொள்ளாது. எந்தவொரு செயலும் மத உணர்வுகளை பாதித்தால் சமூக ஊடகங்களில்  சிறப்பு நடவடிக்கை உள்பட  கடுமையான எடுக்க உள்துறை, நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா  கூறுகையில், பயங்கரவாதத்தை பரப்புவதற்காக இது (உதய்பூர் டெய்லர் படுகொலை) செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ மிகவும் கவலை அளிக்கிறது. இது தலிபானி கலாச்சாரத்தின் தோற்றம் மற்றும் காங்கிரஸ் அதற்கு பாதுகாப்பு அளிக்கிறது. இது காங்கிரஸின் திருப்திப்படுத்தும் அரசியலால் நடக்கிறது என தெரிவித்தார்.