×

"தில்லு இருக்கா எடப்பாடி.. எங்க செஞ்சு பாருங்க" - உதயநிதி சேலஞ்ச்!

 

பாஜக தான் ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து மாற்று கட்சிகளின் தலைமையில் செயல்படும் மாநில அரசுகளுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கத்தில் தான் ஆளுநர்கள் தீவிரமாக செயல்படுகின்றனர். ஏனென்றால் இந்த மூன்று மாநிலங்களும் மத்திய அரசையும் சரி ஆளுநரையும் சரி முழு மூச்சாக எதிர்த்து நிற்கின்றன. அந்த வகையில் நீண்ட நாட்களாகவே மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் ஆளுநர் ஜக்தீப் தங்கருக்கும் மோதல் போக்கு அதிகரித்த வண்ணமே இருந்தது.

இந்த மோதலின் உச்சக்கட்டமாக ட்விட்டரில் தங்கரை மம்தா பானர்ஜி பிளாக் செய்தார். இச்சூழலில் சில நாட்களுக்கு முன்பாக மேற்குவங்க சட்டப்பேரவையை முடக்கி ஆளுநர் ஜக்தீப் தங்கர் உத்தரவிட்டதாக செய்தி வெளியானது. அரசியலமைப்புச் சட்டத்தின்  174ஆவது பிரிவின்படி  தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அவர் முடக்கிவைத்தார் எனவும் சொல்லப்பட்டது. இது பெரும் விவாதத்தை எழுப்பவே தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். ஆளுநரின் செயல், விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது என்றும் கண்டித்திருந்தார்.

ஆனால் இதில் உண்மை இல்லை. மம்தா அரசு கேட்டுக்கொண்டதால் தான் சட்டப்பேரவையை முடக்கிவைத்ததாக ஜக்தீப் தங்கர் விளக்கம் அளித்தார். இது ஒருபுறமிருக்க தமிழ்நாட்டு அரசியலிலும் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி, "மே.வங்கத்தை போல தமிழ்நாட்டிலும் சட்டப்பேரவையை முடக்க வேண்டி வரும்" என்றார். இது திமுக தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மாநில சுயாட்சி பேசிய அண்ணாவின் பெயரை வைத்து கொண்டு இருக்கும் அதிமுகவின் தலைவர் இப்படி பேசலாமா என கண்டனக் குரல்கள் எழுந்தன.


இச்சூழலில் இதற்கு திமுக எம்எல்ஏ உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார். மதுரையில் பிரச்சாரம் செய்த அவர், "மத்தியில் இருக்கும் தைரியத்தில் எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு பேசுகிறார். அவரால் முடிந்தால் தமிழ்நாடு சட்டப்பேரவையை முடக்கி பாருங்கள். அப்படி முடக்கப்பட்டால் மீண்டும் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும். அதிமுக ஆட்சியில் 5 லட்சம் கோடி கடன் வாங்கி காலி செய்துவிட்ட நிலையிலும், கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று சொன்னதை செய்து காட்டியவர் முதல்வர் ஸ்டாலின்" என்றார்.