×

நாசர் என்ற பூனைக்குட்டி குடித்த பாலின் விலை ரூ.800 கோடி 

 

நாசர் என்ற பூனைக்குட்டி குடித்த பாலின் விலை ரூ.800 கோடி  என்று  குற்றம் சாட்டியிருக்கிறார்  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னையில் விநியோகிக்கப்பட்ட ஆவின் பாக்கெட்டில் அளவு குறைவாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  500 எம்எல் கொண்ட பால் பாக்கெட் 430 கிராம் மட்டுமே உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.  இதன் மூலம் தினமும் 2 கோடி ரூபாய் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.   ஆனால் இந்த குற்றச்சாட்டினை ஆவின் நிர்வாகம் மறுத்தது. ஒரே ஒரு பாக்கெட்டில் எடை குறைவாக இருந்திருக்கும் என்றது.  அதற்கு அசராத அண்ணாமலை,  எல்லா பாக்கெட்டுகளிலும் எடை குறைவாகத்தான் இருக்கிறது என்று கூறியிருந்தார்.

இதன்பின்னர்,  இயந்திர தொழில்நுட்ப காரணமாக ஏதேனும் அளவு குறைவாக இருப்பின் உடனடியாக நுகர்வோர்களுக்கு மாற்று பால் பாக்கெட் வழங்கப்படும் என்று ஆவின் நிர்வாகம் சமாளிக்கிறது.

இந்த நிலையில்,  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவின் பால் பாக்கெட் எடை குறைவு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஜெயக்குமார் பதில் அளித்த போது,  ’’ஒரு நாளைக்கு தமிழகம் முழுவதும் 37 லட்சம் லிட்டர் பால் ஆவின் பால் விற்பனையாகிறது .   இதில் தினம்தோறும் ஐந்து லட்சம் லிட்டர் பாலை நாசர் என்ற பூனை குட்டி குடித்து விட்டது.  அந்த பூனை குட்டி பிடித்த பாலின் விலை ஒரு நாளைக்கு இரண்டு கோடியே 40 லட்சம் ரூபாய் .   ஒரு வருடத்திற்கு 800 கோடி ரூபாய் ஆகிறது’’ என்றார்.

அவர் மேலும்,  ‘’ஆவின் பால் பாக்கெட் எடை குறைந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.