×

கச்சேரி ஆரம்பம்.. எடப்பாடி கையில் 2663 -ஓபிஎஸ் கையில் கொடநாடு

 

2663 பொதுக்குழு உறுப்பினர்கள் தன் கையில் இருப்பதால் ஓபிஎஸ்சை ஓரங்கட்டுவதிலேயே  உறுதியாக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.  ஆனால், எடப்பாடி ஒத்துவராவிட்டால் கொடநாடு வழக்கை முழுமூச்சாக கையில் எடுக்க வேண்டும், கொடநாடு ரகசியங்களை அவிழ்த்துவிட வேண்டும்  என்பதில்  ஓபிஎஸ் டீம் உறுதியாக இருக்கிறது.  இனி தான் கச்சேரி ஆரம்பம் என்று முணுமுணுக்க ஆரம்பித்து விட்டனர் ஓபிஎஸ் -இபிஎஸ்  இரு அணியிலும் இல்லாத பொதுவான அதிமுகவினர்.


 2633 பொதுக்குழு உறுப்பினர்களை மொத்தமாக தன் கையில் வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.  அதனால்தான் அதிமுகவே என் பக்கம் இருக்கிறது அப்புறம் எதற்கு ஓபிஎஸ் உடன் சேர வேண்டும்,  ஓபிஎஸ்ஐ சொல்வதைக் கேட்க வேண்டும் என்று கெத்து காட்டுகிறார்.   ஆனால் அந்த பொதுக்குழு உறுப்பினர்களை பல்லாயிரம் கோடி செலவு செய்து விலை கொடுத்து வாங்கி விட்டார்கள்,  பர்ச்சேஸ் செய்து விட்டார்கள் என்று ஓபிஎஸ் தரப்பினர் குற்றம்  குற்றம் சாட்டி வருவது ஒரு பக்கம் இருக்க, மொத்தமாக பர்ச்சேஸ் செய்துவிட்டதால்,   ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை தொடர்ந்து ஓரங்கட்டுவதிலேயே எடப்பாடி உறுதியாக இருக்கிறார்.

இணையலாம் என்று ஓபிஎஸ் அழைத்தும்  எடப்பாடி பழனிச்சாமி முறுக்கி கொண்டு நிற்பதால்,  கொடநாடு வழக்கு கையில் எடுப்போம் என்று எச்சரிக்கை தொடங்கி விட்டனர் ஓபிஎஸ் தரப்பினர்.

அவர் தரப்பு இவர் தரப்பு என்று எல்லாம் அதிமுகவில் இல்லை.  எல்லோரும் ஒரே தரப்புதான் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டார் ஓபிஎஸ். ஆனால், எடப்பாடியோ தான் பொதுச்செயலாளர் என்று முன் வைத்த காலை பின் வைக்க தயாராக இல்லை.  

 பொதுவாகவே ஓபிஎஸ்- இபிஎஸ் மோதல் வரும்போது எல்லாம் கொடநாடு விவகாரம் பூதாகரமாக வெடிப்பது வழக்கமாகிவிட்டது.  இதற்கு காரணம் கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நேரடி தொடர்பு இருக்கிறது என்று ஓபிஎஸ் தரப்பினர் வைத்திருக்கும் குற்றச்சாட்டு தான் காரணம்.  தற்போதும் எல்லோரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று ஓபிஎஸ் அழைப்பு விடுத்திருக்க எடப்பாடி பழனிச்சாமியோ அந்த அழைப்பை நிராகரித்திருக்கிறார்.  காரணம் தன்னிடம் பொதுக்குழு உறுப்பினர்கள் 2663 பேர் இருப்பதால் ஓபிஎஸ்ஐ அவர் உதாசீனப்படுத்துகிறார்.

 இதனால் ஆத்திரமடைந்த ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி,  ’’2663 பேரை மொத்தமாக பிடித்து வைத்துக் கொண்டு சர்க்கஸ் காட்டுகிறார் எடப்பாடி. பயாஸ்கோப் காட்டுகிறார் எடப்பாடி.  இதற்காகத்தான் மக்கள் திலகம் எம்ஜிஆர் அன்றைக்கே முடிவு செய்தார்.  பொதுக்குழு உறுப்பினர்களை, செயற்குழு உறுப்பினர்களை மொத்தமாக பர்ச்சேஸ்  செய்து விடுவார்கள் என்பதை உணர்ந்ததால்தான், தொண்டர்களால்தான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வந்தார்.

 ஓபிஎஸ் நல்ல மனதோடு  எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்று அழைத்தார்.  ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அதை நிராகரித்தார்.    தொண்டன் தலைவராவார்.. தொண்டன் முதல்வராவார்... என்றால் பழனிச்சாமி நீ விட்ரு.. வெளியே வந்துரு... வேற ஒரு ஆளை ஒற்றை தலைமைக்கு நியமனம் செய். நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.   சாதாரண ஒரு தொண்டன் வரட்டும்..நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் . அவர் இதைச் செய்ய மாட்டார்.   ஏனென்றால் பதவி வெறியின் மொத்த உருவம் தான் எடப்பாடி பழனிச்சாமி.   அம்மா வகித்திருந்த பொதுச்செயலாளர் பதவியை வகிக்க வேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிச்சாமியின் எண்ணம்.  அதற்கு பணமும் நீ அடித்த கொள்ளையும் உதவாது .  சிறையில் இருந்து கட்சியை நீங்கள் நடத்த முடியாது.   இதனால்தான் முதல்வரிடம் மன்றாடி கேட்டுக் கொண்டிருக்கிறோம் . கொடநாடு வழக்கை துரிதமாக செயல்படுத்துங்கள்.  ஜெயிலுக்கு போறவங்க ஜெயிலுக்கு போகட்டும் வெளியே இருக்கிறவங்க வெளியே இருக்கட்டும் என்று சொல்கிறார்’’என்று தெரிவித்திருக்கிறார்.

ஓபிஎஸ்க்கும் அவரது மகன் ரவீந்திரநாத்துக்கும் பதவி ஆசை என்று எடப்பாடி பழனிச்சாமி சொல்ல ,  எடப்பாடி பழனிச்சாமிக்கு பதவி வெறி அம்மா வகித்த பொதுச் செயலாளர் பதவியை வகிக்க வேண்டும் என்கிற வெறி என்று கடுமையாக விளாசுகிறார் புகழேந்தி.  எடப்பாடி கையில் 2663 பேர் இருக்க,  ஓபிஎஸ் கையில் கொடநாடு ரகசியங்கள் இருக்க..இனி தான் கச்சேரி ஆரம்பம் என்று முணுமுணுக்க ஆரம்பித்து விட்டனர் ஓபிஎஸ் -இபிஎஸ்  இரு அணியிலும் இல்லாத பொதுவான அதிமுகவினர்.