×

 அதிமுகவில் நடக்கும் குழப்பங்களுக்கு  பாஜகதான் காரணம் - ஆளூர் ஷாநவாஸ்

 

அதிமுகவில் நடக்கும் குழப்பங்களுக்கு எல்லாம் காரணம் பாஜகதான் என்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ். 

 அதிமுக தற்போது இரட்டை தலைமையில் இயங்கி வரும் நிலையில் திடீரென்று தனது ஒற்றை தலைமையின் கீழ் இயங்கி வருவதற்கான முயற்சிகளை எடப்பாடி பழனிச்சாமி முன்னெடுத்து இருக்கிறார்.   இதனால் முதலில் பன்னீர்செல்வம் அதிர்ந்து போனாலும் ஒற்றைத் தலைமை குறித்து பேசவும் தான் தயார் என்று சொல்லி இருக்கிறார்.   ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அது குறித்து இன்னும் பதில் எதுவும் சொல்லவில்லை.

 எடப்பாடி பழனிசாமி,  ஓ. பன்னீர்செல்வம் இருவருமே தங்கள் இல்லங்களில் தங்கள் ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர் .  இருவரின் ஆதரவாளர்களும் போஸ்டர் யுத்தமும் நடத்தி வருகின்றனர்.   தலைமை அலுவலகத்தில் இருவரின் ஆதரவாளர்களும் குவிந்து இருவருக்கு ஆதரவாகவும் முழக்கம் எழுப்பி வந்த நிலையில் ஆவேசப்பட்டு  கைகலப்பில் முடிந்து மண்டை உடைந்து ரத்தம் கொட்டும் அளவிற்கு விவகாரம் பெரிதாகி இருக்கிறது.

 அதிமுகவில் பொதுக்குழு வரும் 23-ஆம் தேதி கூட இருக்கும் நிலையில் அதற்குள் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ என்று கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

 இந்தநிலையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ .பன்னீர்செல்வம் இல்லத்தில் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், குன்னம், ராமச்சந்திரன் தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோர் ஆலோசனை ஈடுபட்டிருந்தனர்.  அதன் பின்னர் செய்தியாளர்களிடம் வெல்லமண்டி நடராஜன் பேசியபோது,  ஜெயலலிதாவுக்கு பிறகு ஓ .பன்னீர்செல்வம்,  எடப்பாடி பழனிச்சாமி இருவருமே ஆட்சியை சிறப்பாக நடத்தி வந்தனர்.  தற்போது எடப்பாடி பழனிச்சாமி பிரச்சனையை ஆரம்பித்திருக்கிறார். எடப்பாடியை  யாரோ பின்னாலிருந்து இயக்குகிறார்கள் என்று சொல்லியிருக்கிறார்.

 இதற்கிடையில், விடுதலை சிறுத்தைகளின் கட்சி எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் நாகர்கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது செய்தியாளர்கள் அவரை சந்தித்தனர்.  அப்போது அதிமுக நடக்கும் குழப்பங்கள் குறித்த கேள்விக்கு , அதிமுகவில் தற்போது நடந்து வரும் குழப்பங்களுக்கு எல்லாம் பாஜகவின் தலையீடு தான் காரணம் என்று  குற்றம் சாட்டினார்.   அவர் மேலும்,    அனைத்து துறைகளிலும் பாஜக அரசு சிபிஐ ,அமலாக்கத் துறை மூலம் தங்களுக்கு வேண்டாதவர்களை பழிவாங்கி வருகிறது.   ஆர்எஸ்எஸ் அமைப்பை பலப்படுத்த அதற்காகத்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் அக்னிபத் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார் என்றும் குற்றம்சாட்டினார் ஆளூர் ஷாநவாஸ்.