×

பீகாரில் 10 லட்சம்  பேருக்கு வேலை..  வாக்குறுதியை பா.ஜ.க. அல்ல, எங்க கட்சிதான் நிறைவேற்றும்... தேஜஸ்வி யாதவ்
 

 

பீகாரில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும் என்ற முதல்வர் நிதிஷ் குமாரின் அறிவிப்பை குறிப்பிட்டு, வாக்குறுதியை பா.ஜ.க. அல்ல,ராஷ்டிரிய ஜனதா தளம் தான் நிறைவேற்றும் என்று ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறேன் என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

பீகாரில் நேற்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தனது சுதந்திர தின உரையில், நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். 10 லட்சம் வேலைகள் என்ற இந்த எண்ணம் எங்களிடம் உள்ளது. நாங்கள் அதை செய்வோம். நான் கூறுவேன், நாங்கள் 20 லட்சம் வேலைகளை இலக்காக கொண்டுள்ளோம். அரசு மற்றும் தனியார் துறைகள் மூலம் இந்த இலக்கை அடைய முயற்சிப்போம் என தெரிவித்தார். இது தொடர்பாக பீகார் துணை முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தலைவருமான தேஜஸ்வி யாதவ் பேசுகையில் கூறியதாவது: 10 லட்சம் வேலைகள் வழங்கும் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார். 

இந்த எண்ணிக்கை 20 லட்சமாக உயர்த்தப்படும். வேலையின்மைக்கு முற்றுப்புள்ளி வைப்பது எங்களின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். வேலைவாய்ப்பை விட பெரிய பிரச்சினை இன்று இருக்க முடியாது. இன்றைய அறிவிப்பு எனது வாக்குறுதி என்ன ஆனது என்று கேள்வி எழுப்புவர்களை அமைதிப்படுத்த வேண்டும். வாக்குறுதியை பா.ஜ.க. அல்ல,ராஷ்டிரிய ஜனதா தளம் தான் நிறைவேற்றும் என்று ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறேன். இப்போது இலவசங்கள் விநியோகிக்கப்படுகிறது என்று பா.ஜ.க.வினர் சொல்வார்கள். என்ன கேலிக்கூத்து! நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறோம். 

இன்றைக்கு வேலைவாய்ப்பு குறித்து விவாதம் நடப்பதுதான் சாதனை. நாங்கள் உண்மையான சோசலிஸ்டுகள். அவர்கள் பிரசங்கிப்பதை பின்பற்றுபவர்கள். நாங்கள் ஜூம்லா (வெற்று வாக்குறுதி) கட்சி அல்ல. பீகார் ஒரு முன்மாதிரியை அமைத்துள்ளது. இது ஒரு அளவுகோலை அமைத்துள்ளது. இது நாடு முழுவதும் ஒரு ஆழமான செய்தியை அனுப்பியுள்ளது. இது உண்மையான பிரச்சினையாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பீகாரில் கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சியில் அமர்ந்தால் பத்து இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என தேஜஸ்வி யாதவ் அம்மாநில மக்களுக்கு வாக்குறுதி அளித்து இருந்தார்.