×

"எடப்பாடி பத்தி அப்போவே... பாஜக ரொம்ப லேட்" - விசனப்பட்ட டிடிவி தினகரன்!

 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. நாளையோடு வேட்புமனு தாக்கல் நிறைவுபெறுகிறது. ஆனால் இன்னும் பல கட்சிகளில் வேட்பாளர் பட்டியலே இறுதி முடிவு செய்யப்படவில்லை. இன்றைக்குள் அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல இம்முறை ஆளுங்கட்சியான திமுக மட்டுமே கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியிலிருந்து ஏற்கெனவே பாமக விலகிவிட்டது. தற்போது பாஜகவும் தனித்து போட்டியிடுகிறது. 

அதிமுக கூட்டணியை பொறுத்தவரை அனைத்து கட்சிகளும் தனித்தே தேர்தலை சந்திக்கவிருக்கின்றன. அரசியலில் எதிர்பாராத திருப்பங்கள் எப்போது வேண்டுமானாலும் அரங்கேறலாம். அப்படியானது தான் அதிமுக பாஜக கூட்டணியின் தற்காலிக பிளவு. நயினார் நாகேந்திரனின் அதிமுகவுக்கு ஆண்மையில்லை பேச்சு தான் இதற்குக் காரணமாக கூறப்படுகிறது. ஆனால் கூட்டணி தொடர்வதாக அண்ணாமலை கூறுகிறார். தனித்து களம் கண்டு பலத்தை காணவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்சூழலில் தனித்து போட்டியிடக் கூடிய மற்றொரு கட்சியான அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எடப்பாடி பழனிச்சாமி குறித்து மிகவும் தாமதமாக புரிந்து கொண்டுள்ளனர். இவர்கள் முன்பே சரியாக இருந்திருந்தால் ஒரு முறைகேடான ஆட்சியை தடுத்திருக்கலாம்” என்றார். சசிகலா சிறை செல்லும் முன் எடப்பாடியிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு சென்றார். அதற்கு பின் நடந்த கதைகளை தமிழ்நாடு மறக்காது. 

எங்களையே ஏமாற்றிவிட்டார்; நீங்களாம் (பாஜக, பாமக) எம்மாத்திரம் என்ற தொனியிலேயே டிடிவி தினகரன் எடப்பாடியை விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "பண மூட்டையோடு அலைகிற கட்சிகள் பணத்தை கொடுத்து மக்களை விலைக்கு வாங்கலாம் என அலைவார்கள். ஏற்கெனவே திமுக ஆட்சி வந்தா என்ன நடக்கும் என்று நன்றாகத் தெரியும்.  அதனால் அவர்களுடைய வேலையை ஆரம்பித்துவிட்டார்கள. வார்டு வாரியாக திமுகவை வெற்றி பெற மக்கள் அனுமதித்தால் இது மிகப் பெரிய பேரிடரில்தான் முடியும். 

இதை உணர்ந்து இந்த தேர்தலில் நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். மக்களுக்காக உழைக்கக் கூடியவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். பொதுமக்களின் சொத்துகள், அரசின் சொத்துகளை சுரண்டாவதர்களுக்கு வாக்களிக்க வேண்டும். பணத்துக்காக வாக்களிக்காமல் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் மக்கள் நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். அமமுக சார்பில் நிச்சயமாக நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்துதான் இந்தத் தேர்தலில் போட்டியிட செய்கிறோம். எனவே அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.