×

விடியல் ஆட்சி இல்ல; விடியா மூஞ்சி ஆட்சி- டிடிவி தினகரன்

 

தஞ்சையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று தனது 60 வது பிறந்தநாளை 60 கிலோ கேக் வெட்டி கட்சியினருடன் கொண்டாடினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு தி.மு.க வை எதிர்த்து போட்டியிட வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா தங்கள் வாழ்நாள் முழுவதும் எதிர்த்த தி.மு.க வை வீழ்த்த ஜெயலலிதாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சேர வேண்டும். ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் தான் திமுகவை வீழ்த்த முடியும் என்பது எதார்த்தமான உண்மை. அனைவரும் ஒருங்கிணைந்து பல கட்சியாக இருந்தாலும் ஒரு அணியில் இணைந்து தி.மு.க வை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் நம்முடன் கூட்டணி கட்சிகள் இணைந்து போரிட்டால் தான் வெற்றி பெற முடியும்.

தி.மு.க.வில் எம்.எல்.ஏ வாக இருக்கும் உதயநிதி  அமைச்சர் ஆகிறார். ஸ்டாலினுக்கு ஏன் அவசரம் என்று தெரியவில்லை அமைச்சராவதில் தவறில்லை, இதில் ஏதோ அவசரம் தெரிகிறது, அதை காலம் தான் உணர்த்தும். தேர்தலில் வாக்குறுதி கொடுத்துவிட்டு மக்களை ஏமாற்றுவது தான் தி.மு.க. பழனிச்சாமி கம்பெனியை எதிர்த்த மக்கள் 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இல்லாத தி.மு.க வந்தால் நன்றாக இருக்கும் என மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் விடியலாட்சி என்று சொன்னார்கள் அது விடியா மூஞ்சி ஆட்சியாக தான் உள்ளது. தமிழக மக்கள் வருகிற பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பார்கள். அது பாராளுமன்ற தேர்தலில் தெரியும்” என்றார்