×

அதிமுகவில் ஓபிஎஸ் கதை முடிந்து விட்டது என ஜெயக்குமார் கூறுவது அகம்பாவத்தின் உச்சம்- டிடிவி தினகரன்

 

ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழக ஆளுநர் காலம் தாழ்த்துவது ஆளுநரின் பதவிக்கு அழகல்ல என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அமமுக புரட்சி தலைவர் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் பங்கேற்று பல்வேறு ஆலோசனை வழங்கினார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி.தினகரன், “ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான அவசர சட்டம் காலாவதியானது துரதிருஷ்டவசமானது. காலம் தாழ்த்துவது ஆளுநரின் பதவிக்கு அழகல்ல. வரும் காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாமல்,  விமர்சனத்துக்கு உள்ளாகாமல் ஆளுநர் செயல்பட வேண்டும். அதிமுகவில் ஓபிஎஸ் கதை முடிந்து விட்டது என்று ஜெயக்குமார் பேசுவது அகம்பாவம். ஆணவத்தில் பேசுகிறார்கள்.  அவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். மின் இணைப்போடு ஆதார் இணைப்புக்கு மக்களுக்கு உரிய அவகாசம் அளிக்க வேண்டும். டிசம்பர் 31 வரை அளிக்கப்பட்டுள்ள கால அவகாசம் போதுமானது அல்ல” என தெரிவித்தார்.