×

ஈபிஎஸ்க்கு ஆதரவு அளிக்கும் அதிமுக செயற்குழு உறுப்பினர்களுக்கு ரூ.25 லட்சம்- டிடிவி தினகரன்

 

அமமுக தருமபுரி மாவட்ட செயற்குழு கூட்டம், தருமபுரியில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது, கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், “அதிமுக செயற்குழு உறுப்பினர்களுக்கு இருபத்தி ஐந்து லட்சம் முதல் ஐந்து கோடி வரை பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக  சொல்லப்படுகிறது என நான் கூறினேன். இதற்கு கேபி முனுசாமி மான நஷ்ட வழக்கு தொடர்வதாக பேட்டி அளித்திருக்கிறார்.  மான நஷ்ட வழக்கு தொடர்ந்தால் அதனை சந்திப்பேன்.  பொதுமக்கள் பேசியதை தான் நான் பேசினேன். காலை 11 மணி வரை ஓ பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தருபவர்கள் மாலை எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளிக்கிறேன் என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு என்ன ஞானோதயம் வந்தது. குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது.

நான் நேரடியாக பார்த்தால் பார்த்தேன் என்று சொல்லி இருப்பேன். தஞ்சாவூரில்  பணம் வழங்கியதாக  கூறியதை தான் நான் கூறினேன். தேர்தல் ஆணையத்தில் அமமுக முறையாக பதிவு செய்து தனியாக சின்னம் பெற்று ஜனநாயக முறைப்படி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் தவறான ஆட்சி இருந்ததால் மக்கள் திமுகவிற்கு வாய்ப்பு அளித்திருக்கிறார்கள். அவர்களை  எதிர்த்து போராடி அமமுக  ஆட்சியை பிடிக்கும். அதிமுகவில் பொதுக்குழு நடந்தால் என்ன பொதுச் செயலாளர் பதவி வந்தால் என்ன வரவில்லை என்றாலும் என்ன? ஜெயக்குமார் ஆடு நனைகிறதே ஓநாய் அழுகிறது என்று பேசியிருக்கிறார் . ஓநாய் கூட்டங்களே இவர்கள் தான். 

ஜெயலலிதா இருக்கும்போது ஆடுகளாக இருந்தவர்கள் தற்போது ஓநாய்களாக மாறிவிட்டார்கள். அதிமுகவில் பொது செயலாளர் இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி ஒற்றை தலைமை, இரட்டை தலைமை மூன்று தலைமை என நடிகர் அஜித்தை தல என கூறுவார்களே அதைப்போல ஐந்து தலை வந்தாலும் கவலை இல்லை. நாங்கள் இலக்கை நோக்கி அர்ஜுனனை போல் பயணிக்கிறோம்” என தெரிவித்தார்.