×

சுப்பு கார்டன் விவகாரம் - அதிமுக நிர்வாகி விவேகானந்தன் சிறையிலடைப்பு

 

 அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் அதிமுக நகர செயலாளர் விவேகானந்தன் கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 கரூர் மாவட்டத்தில் நங்கவரம் பேரூராட்சியின் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருபவர் சுப்பையா.   இவர் கடந்த அதிமுக ஆட்சியில் 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை புஞ்சைபுகழூர் பேரூராட்சியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார். 

அப்போது,   தனது பணியான கட்டிட உரிமம் வழங்குதல், சொத்து வரி நிர்ணயம் செய்தல், ஆய்வு செய்தல் ,மனைப்பிரிவு அங்கீகாரம் வழங்க களப்பணி ஆய்வு செய்து சட்டத்திற்கு உட்பட்டு இருந்தால் அதனை செயல்படுவதற்கு பரிந்துரை செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வந்துள்ளார்.   அப்போது புகலூர் நகராட்சி அதிமுக செயலாளர் விவேகானந்தன் என்பவர் சுப்பு கார்டன் என்கிற பெயரில் உள்ள மனைகளுக்கு உரிய முறையில் மனைப்பிரிவு அங்கீகாரம் பெறாத மனைகளுக்கு தடையின்மை சான்று கேட்டு மிரட்டியிருக்கிறார். 

 இதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார் கருப்பையா. அதனால் அங்கு பணியாற்றிய கருப்பையா நங்கவரம் பேரூராட்சிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பணிமாற்றம் செய்யப்பட்ட பின்னர் தன்னுடைய கையெழுத்தை போலியாக கையெழுத்துப் போட்டு தடையின்மை சான்றிதழ் பெற்று கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அதிமுக நகரச் செயலாளர்கள் விவேகானந்தனும்,  அவரது மனைவியும் பேரூராட்சி தலைவருமான லலிதா,  மாமியார் சரோஜா,  ஜாகீர்உசேன் , கண்ணன் ஆகிய 5 பேர் பெயரில் பத்திரப்பதிவு செய்து உள்ளனர். 

 இந்த மோசடியான பத்திரப்பதிவினால் பேரூராட்சிக்கு 5 லட்சம் ரூபாய் வரைக்கும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று உதவி இயக்குநர் பேரூராட்சிகள் திண்டுக்கல் மாவட்டத்திற்கு கருப்பையா புகார் தெரிவித்திருந்தார்.   கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தடையின்மை சான்று வழங்கப்பட்டுள்ள சுப்பு கார்டன் இடம் தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருந்தார்.

 இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.  போலியாக கையொப்பமிட்டு தடையில்லா சான்று பெற்றது விசாரணையில் தெரியவந்தது .  இதையடுத்து அதிமுக நகர செயலாளர் விவேகானந்தன் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  இதையடுத்து விவேகானந்தன் தலைமறைவாக இருந்து வந்த நிலையில்,   நேற்று இரவு ஏழு முப்பது மணி அளவில் கரூர் நகரில் கோவை சாலையில் காரில் வந்தபோது போலீசார் அவரை கைது செய்து மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.   அதன் பின்னர் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை கரூர் கிளை சிறையில் அடைத்துள்ளனர்.