×

சோதனையின்போது என்னிடம் ரூ.7,500 மட்டுமே இருந்தது- எஸ்பி வேலுமணி

 

தனது வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை எனவும் இது முழுக்க முழுக்க திமுக அரசின் பழி வாங்கும் நடவடிக்கை என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

கோவை குனியமுத்தூரில்  முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இல்லத்தில் காலை 6.00 மணிக்கு துவங்கிய லஞ்ச ஒழிப்பு துறை  சோதனை மாலை 3.00 மணி அளவில்  நிறைவடைந்தது. இதனையடுத்து  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தூண்டுதலின் பேரில் மூன்றாவது முறையாக லஞ்ச ஒழிப்பு துறை  பொய் வழக்கு  போட்டுள்ளனர். எந்த ஆதாரமும் இல்லாமல் சோதனை நடத்தி இருக்கின்றனர். இந்த சோதனையில் 7500 ரூபாய் மட்டுமே இன்று என்னிடம் இருந்தது. இன்று நடந்த சோதனையிலும் எதுவும் கைபற்றவில்லை. கடந்த இரு முறையும் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில்  எதுவும் கைபற்றவில்லை. வழக்குகள் விசாரணைக்கு வரும் போதெல்லாம்
நீதி அரசர்ளுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக ஊடகங்கள் மூலம் இந்த அரசு செயல்படுகிறது.

சென்னையில் யார் வீட்டில் சோதனை நடக்கின்றது என்றே தெரியவில்லை, ஆனால் நெருங்கிய நண்பர் என்று போடுகின்றனர். முதல்வரான பின்பு வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். சோதனையில் எதுவும் இல்லை என எழுதி கொடுத்து விட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்று விட்டனர். இன்று கோவை காவல் துறை மிகப் பெரிய அத்துமீறலை செய்து இருக்கிறது. எம்.எல்.ஏக்கள், வழகறிஞர்கள் என அனைவரையும் கைது செய்து இருக்கின்றனர். அரசியல் பழி வாங்கலின் உச்ச கட்டத்துக்கு  இந்த அரசு போய் விட்டனர். மின் கட்டண உயர்வு குறித்து மக்களை திசை திருப்பவே இந்த சோதனை நடத்தி இருக்கின்றனர்.

எனது வீட்டில் இருந்து எதுவும் கைபற்றப்பட வில்லை,வீட்டில் இருந்த ஷோபா, சேர் இவற்றை மட்டுமே படம் எடுத்து விட்டு போயிருக்கின்றனர். எல்.இ.டி பல்புகள் 2014 ல் ஜெ கொண்டு வந்த திட்டம், மின் சேமிப்பிற்காக கொண்டு வந்த திட்டம், இதன்மூலம் மின் சேமிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்ததில் அனைத்தும் சரியாக நடந்துள்ளது  பிரஸ் ரிலீஸ் கொடுத்து விட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைக்கு வருகின்றனர். எந்த ஆதாரமும்  இல்லாமல் சோதனை நடத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு வரும் போது அறப்போர் போன்ற திமுக கைகூலிகள் பொய் தகவலை வெளியிட ஊடகங்களை பயன்படுத்துகின்றனர்.

திமுக ஆட்சியில் லஞ்ச லவண்யம் அதிகரித்து  இருகின்றது, லஞ்சம் தலைவிரித்து ஆடுகின்றது. ஒன்றரை ஆண்டில் 5000 கோடிக்கு மேல் ஸ்டாலின் குடும்பம் சம்பாதி்த்துள்ளது. அமைச்சர்களை துன்புறுத்தி 5000 கோடி சம்பாதித்து இருக்கின்றனர். இதைபற்றி ஊடகங்கள் யாராவது பேசுங்கள். மீடியாவை மிரட்டி , காவல் துறையை கைக்கூலியாக வைத்து இந்த அரசு செயல் படுகின்றது.நாங்க கொண்டு  வந்த திட்டங்களைதான் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. பத்திரிகை நண்பர்களால்தான் இந்த ஆட்சி இருக்கின்றது, நீங்கள்தான் ஜனநாயக தூண். ஆட்சி மாற்றத்தை பத்திரிகைகளால்  கொண்டு வர முடியும்.

திமுக அராஜகத்தை பத்திரிகைகள் வெளியில் கொண்டு வர வேண்டும். யாருக்கும் இது போன்ற சோதனைகள்  நடந்து  இருக்காது. எவ்வளவு பழி வாங்கினலும் , இந்த கட்சிக்கு விசுவசமாக செயல்படுவேன். பழி வாங்கும் இந்த  ஆட்சியின் முடிவு , விரைவில் எட்டும். விவாதங்களில் என்ன வேண்டுமானலும் பேசிக்கொள்ளட்டும் ஆனால், இந்த சோதனை முழுக்க முழுக்க பழிவாங்கும் நடவடிக்கை. முதல்வர் ஸ்டாலின் மோசமான தலைவர். என்னை அவர் பழிவாங்க முக்கிய காரணம் அதிமுக  ஆட்சியை காப்பாற்ற துணை இருந்தேன் என்பதுதான். குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர பார்த்தார் ஸ்டாலின் ,அது முடியவில்லை. அதனால் இப்போது  பழிவாங்கும் விதமாக ஸ்டாலின் செயல் படுகின்றார்” என தெரிவித்தார்.