×

கெஜ்ரிவால் ஜி.. தேச துரோகி ஜெயின் உங்கள் ஆதரவை எவ்வளவு காலம் பெறுவார்?..  ஸ்மிருதி இரானி கேள்வி
 

 

ஊழல் செய்பவர் துரோகிக்கு சமம் என்று சொன்னீர்கள், தேச துரோகி சத்யேந்தர் ஜெயின் உங்கள் ஆதரவை எவ்வளவு காலம் பெறுவார் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கேள்வி எழுப்பியுள்ளார்.

பண மோசடி வழக்கில் டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத்துறையினர் கடந்த திங்கட்கிழமையன்று கைது செய்தனர். இந்நிலையில், சத்யேந்தர் ஜெயினை வரும் 9ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. அதேசமயம், சத்யேந்தர் ஜெயினுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குரல் கொடுத்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், சத்யேந்தர் ஜெயின் மீதான வழக்கை தனிப்பட்ட முறையில் நான் ஆய்வு செய்தேன், மத்திய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்த வழக்கு பொய்யானது என்பதை கண்டறிந்தேன். 

எனது அரசாங்கத்தில் ஊழலை சகித்துக் கொள்ள முடியாது. அரசியல் காரணங்களுக்காக ஜெயின் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. எங்களுக்கு நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது. ஜெயின் உண்மையின் பாதையில் செல்கிறார், அவர் சுத்தமாக வெளியே வருவார் என தெரிவித்தார். இந்நிலையில், தேச துரோகி சத்யேந்தர் ஜெயின் உங்கள் ஆதரவை எவ்வளவு காலம் பெறுவார் என அரவிந்த் கெஜ்ரிவாலிடம் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கேள்வி கேட்டுள்ளார். 


மத்திய அமைச்சர் ஸ்மிருதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், சத்யேந்தர் ஜெயின் டெல்லியில் உள்ள பல்வேறு காலனிகளை சுற்றியுள்ள 200 பிகா நிலங்களை போலி நிறுவனங்கள் மூலம் கையகப்படுத்தியுள்ளார். ஊழல் தடுப்பு சட்டத்தில் சத்யேந்தர் ஜெயின் முதன்மை குற்றவாளி என்பது உண்மையா? ரூ.16.39 கோடி ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் இன்னும் உங்கள் அரசில் அமைச்சராக இருக்கிறாரா? ஊழல் செய்பவர் துரோகிக்கு சமம் என்று சொன்னீர்கள். தேச துரோகி சத்யேந்தர் ஜெயின் உங்கள் ஆதரவை எவ்வளவு காலம் பெறுவார்? என தெரிவித்தார்.