×

பொதுச்செயலாளராக ஈபிஎஸ் இருப்பதற்கு பல்வேறு இடர்பாடுகள்- செங்கோட்டையன்

 

எடப்பாடி பழனிச்சாமி தற்போது பொதுச்செயலாளராக இருக்கிறார், இதற்கு பல்வேறு இடர்பாடுகள் இருந்து கொண்டு இருக்கின்றது என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு, பூத் கமிட்டி குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் அமைப்பு செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், “ஒவ்வொரு பூத்துகளிலும் ஆட்களை நியமிப்பது அதேபோன்று அதிமுக ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். அம்மாவின் வழியில் சிறந்த ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி நடத்திக் காட்டினார், இன்று அவர் பொதுச் செயலாளராக இருந்து கொண்டு இருக்கிறார், இதற்கு அவருக்கு பல்வேறு இடர்பாடுகள் இருந்து கொண்டு இருக்கின்றன.  சில வெட்டு கிளிகளும், சில வேடந்தாங்கல் பறவைகளும், சில பட்டுப் பூச்சிகளும், சில பருவ கால சிட்டுக்களும் அனைத்திந்திய அண்ணா திராவிட கழகத்தை விட்டு பிரிந்து சென்றாலும் இந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தமிழக மண்ணில் யாராலும் வீழ்த்த முடியாது.  ஏனென்றால் நமது செயல் வீரர்கள் இங்கே இருக்கிறார்கள், சிலர் நம் இயக்கம் அழிந்து விடும் என கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்,

காற்றை சுவர் எழுப்பி தடுத்துவிட முடியாது, கடலை அணை போட்டு தடுக்க முடியாது, எறும்பு ஏரி இமயம் கேயப் போவதில்லை அதுபோல அண்ணா திமுகவை எவராலும் இந்த மண்ணிலே வீழ்த்த முடியாது. நம்முடைய திட்டங்கள் அனைத்தும் மக்களை வாழ வைத்தது, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி காட்டியது,  வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளையும் பிடிப்போம், அதற்குப் பிறகு சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைப்போம்” என தெரிவித்தார்.