×

"விஜய்லாம் எனக்கு ஒரு போட்டியே இல்ல" - சீமானுக்கு சுர்ர்ருனு ஏறிய கோபம்!

 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இம்முறை திமுக மட்டுமே கூட்டணியோடு தேர்தலை எதிர்கொள்கிறது. அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அமமுக என அனைத்து கட்சிகளும் தனித்து களம் காண்கின்றன. இவையுடன் ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றி கொடுத்த பூஸ்ட்டில் விஜய் மக்கள் இயக்கம் வேறு களம் காண்கிறது. இதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் யாருக்கு சாதகமாக இருக்கும் என்பதை கணிக்க முடியவில்லை. இருப்பினும் அனைத்து கட்சியினரும் ஆளும் திமுகவை கடுமையாக விமர்சித்து வாக்கு சேகரிக்கின்றனர். 

இச்சமயம் ஒரு விவாதம் எழுந்திருக்கிறது. இந்த தேர்தலிலாவது விஜய் மக்கள் இயக்கத்தை தாண்டி அதிக இடங்களில் நாம் தமிழர் கட்சி வெற்றிபெறுமா என்பதே அது. தேர்தல் அரசியல் களத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிற்கும் கட்சி நாம் தமிழர் கட்சி. ஆனால் விஜய் மக்கள் இயக்கமோ நேற்று மழைக்கு முளைத்த காளான் என்று சொல்லலாம். அதில் தப்பேதும் இல்லை. சொல்லப்போனால் முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்யாத ஒரு இயக்கம். இதனைக் காரணம் காட்டி ஆட்டோ சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் நிராகரித்தது அனைவரும் அறிந்ததே.

நாம் தமிழர் இதில் அனைத்திலும் விஜய் மக்கள் இயக்கத்தை விட முன்னேற்றத்திலேயே இருக்கிறது. ஆனால் கடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 169 பேர் சுயேச்சையாக களமிறங்கினர். அவர்களில் 120க்கும் மேற்பட்டோர் வெற்றி வாகை சூடினர். ஆனால் 10 ஆண்டுகளாக களத்தில் நிற்கும் நாம் தமிழர் கட்சியால் அந்த எண்ணிக்கையைத் தொட முடியவில்லை. ஒரு கவுன்சிலராக கூட முடியவில்லை. இதுதொடர்பாக அப்போதே அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு அவர், "உள்ளாட்சி தேர்தலை பொறுத்த வரைக்கும் உள்ளூர் செல்வாக்கு தான் முக்கியம். விஜய்க்காக வாக்களித்தார்கள் என்று நான் நினைக்கவில்லை. அதிக இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் வென்றிருந்தால்  வாழ்த்துக்கள்" என்றார். அப்போதே இதற்கு எதிர்வினையாற்றிய விஜய் ரசிகர்கள், "உள்ளாட்சி தேர்தலில்  உள்ளூர் செல்வாக்கு தான் முக்கியம் என்றால், உங்கள் கட்சியினருக்கு ஏன் உள்ளூர் செல்வாக்கு இல்லை?  அப்படி இல்லாத நபர்களைத் தான் வேட்பாளர்களாக களம் இறக்கினீர்களா?”  என கேள்விகளால் துளைத்தெடுத்தனர். பெரும் வெற்றிபெற்ற திமுகவே சைலன்டாக இருந்த நிலையில், இந்த இரு தரப்பும் ட்விட்டரில் முட்டி மோதிக்கொண்டன.

இருப்பினும் அப்போது இருந்து விஜய் மக்கள் இயக்காம் தொடர்பான கேள்வி விடாமல் அவரை துரத்திக் கொண்டே நிற்கிறது. இச்சூழலில் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு சீமான் நேர்காணல் கொடுத்திருந்தார். அதில் பல்வேறு கேள்விகளை நெறியாளர் முன்வைத்தார். இதனிடையே "பெரிதாக விளம்பரம் இல்லாமல், ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாத விஜய் மக்கள் இயக்கம் நூற்றக்கணக்கான இடங்களை பெறுகிறபோது, 10 ஆண்டுகளாக களத்தில் நிற்கும் நாம் தமிழர் கட்சி தேர்தலில் பினனடைவை சந்திக்கும்போது வருத்தமாக இருக்காதா?" என்ற கேள்வியும் கேட்கப்பட்டது.

அதற்கு ஆவேசமாக பதிலளித்த சீமான், "நடிகர் விஜய் குறித்து மாறி மாறி என்னிடம் தான் கேள்வியெழுப்புகிறீர்கள். ஏன் ஸ்டாலினிடமோ, எடப்பாடியிடமோ, கமலிடமோ விஜயகாந்திடமோ பேசுவதில்லை. எங்களுக்கென தனி கோட்பாடு இருக்கிறது. விஜய் எனக்கு எந்த வழியில் போட்டி? எதற்கு அவருடன் என்னை ஒப்பிட்டு பேசிட்டி இருக்கீங்க? அவர் கோட்பாடு தனி, அவர் கொள்கை தனி. இதுகுறித்து ஊடகங்கள் தான் பேசுகின்றன. அவர் கட்சி ஆரம்பித்து கொள்கை குறித்து பேசிய பிறகு பேசினாலும் பரவாயில்லை. கட்சி ஆரம்பிப்பதாக சொல்லாத அவர் எங்களை முந்திவிட்டார் என்று சொல்வதெல்லாம் என்னத்த சொல்ல” என்றார்.