×

“ஈபிஎஸ் ஏற்றுக்கொண்டால் சசிகலா, தினகரனை அதிமுகவில் சேர்த்துக்கொள்ளலாம்; ஆனால் ஓபிஎஸ்-ஐ சேர்க்க முடியாது”

 

சசிகலா, டி.டி.வி தினகரன் இருவரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்றுக் கொண்டால் அவர்களை கட்சியில் இணைப்பது தொடர்பாக தலைமை முடிவு செய்யும் என எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளின் படி மதுரை திருப்பரங்குன்றம் மற்றும் மேலூர் தொகுதிகளின் 10 பிரச்சினைகள் அடங்கிய பட்டியலை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் எம்.எல்.ஏ க்கள் வி.வி.ராஜன் செல்லப்பா மற்றும் பெரியபுள்ளான் (எ) செல்வம் ஆகியோர் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜன் செல்லப்பா, "திருப்பரங்குன்றத்தில்  தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்து 120 நாட்கள் ஆகியும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை, அதே போல திருக்கோயில் பணி, பாதாள சாக்கடை திட்டப் பணி என பல பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வினால் திமுகவை மக்கள் ஏற்றுக் கொள்ள முடியாத சூழலில் உள்ளனர். மகளிர் இலவச பேருந்துகளில் ஏறுவதற்கு பெண்கள் மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள். பயனற்ற பேருந்துகள் மட்டுமே இலவச பேருந்துகளாக ஒட்டப்பட்டு வருகிறது. தமிழக அரசு மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை எதும் செய்யவில்லை, அதிமுக அரசு காலகட்டத்தில் கொண்டு வந்த திட்டங்களை தான் முதல்வர் தற்போது திறந்து வைத்து வருகிறார்.

ஓ.பி.எஸ் இனி எந்தவொரு தவறான வழிக்கும் செல்ல மாட்டார் என நினைக்கிறேன், ஓ.பி.எஸ் உடன் இருப்பவர்கள் அவரை தவறான வழிக்கு அழைத்து செல்லுகிறார்கள், ஏற்கனவே தவறான வழியில் பயணித்து விட்டு என்ன செய்வதனே தெரியாமல் ஓ.பி.எஸ் உள்ளார், ஓ.பி.எஸ் திமுகவுடன் தொடர்பு இல்லை என நிரூபித்தால் அதிமுக சேர்க்க நினைக்கலாம், ஆனால் அதற்கு தற்போதைய காலகட்டத்தில் நடைபெற வாய்ப்பு இல்லை, சசிகலா, டி.டி.வி தினகரன் இருவரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்றுக் கொண்டால் அவர்களை கட்சியில் இணைப்பது தொடர்பாக தலைமை முடிவு செய்யும், அதிமுகவை இனி யாரின் தயவும் தேவையில்லை, அதிமுக மிக வலுவாக உள்ளது, அதிமுகவுக்கு இனி புதிய தலைவர்கள் தேவையில்லை, எங்கள் தரப்பில் சொல்லுவதை மக்கள் நம்புகிறார்கள், ஓ.பி.எஸ் சொல்லுவதை மக்கள் நம்பவில்லை” என கூறினார்