×

கர்நாடகாவில் 40 சதவீத கமிஷன் புகார்களுக்கு எதிராக பிரதமரோ, முதல்வரோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை... ராகுல்

 

கர்நாடகாவில் 40 சதவீத கமிஷன் புகார்களுக்கு எதிராக பிரதமரோ அல்லது முதல்வரோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். 

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.  அரசு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களிடம இருந்து அமைச்சர்கள் 40 சதவீதம் கமிஷன் கேட்கின்றனர் என ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார். இது கர்நாடக  அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இதனையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாநில பா.ஜ.க. அரசை கடுமையாக தாக்கியது. 

மேலும், இங்கே 40 சதவீத கமிஷன் பெறப்படும் என்ற வாசகத்துடன் முதல்வர் பசவராஜ் பொம்மை படத்துடன் கூடிய க்யூஆர் கோட் போஸ்டரை பல இடங்களில் காங்கிரஸார் ஒட்டினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது கர்நாடகாவில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். கர்நாடகாவின் காலலே கேட் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில் கூறியதாவது: கர்நாடகாவில் 40 சதவீத கமிஷன் திருடப்படுவதாக (கேட்கப்படுவது) கர்நாடக ஒப்பந்ததாரர் சங்கம் பிரதமருக்கு கடிதம் எழுதியது. 

பிரதமர் நடவடிக்கை  எடுக்கவில்லை. 13 ஆயிரம் பள்ளி சங்கங்களிடம் இருந்து 40 சதவீத கமிஷன் எடுக்கப்பட்டது, பிரதமரோ அல்லது முதல்வரோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கர்நாடகாவில் எந்த இளைஞருக்கும் வேலை கிடைக்காது. அரசாங்கத்தில் 2.5 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஊழல், கே.பி.எஸ். ஊழல், பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் ஊழல். ஆனால் பணம் அனைத்தும் ஒரே அமைப்பிற்கு சென்றதால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.