×

"ஏழைகள் என 2 முறை உச்சரித்ததற்கு நன்றி" - பட்ஜெட்டை கிழித்தெடுத்த ப.சிதம்பரம்!

 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரி தொடர்பாக எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. மாறாக, 5ஜி ஏலம் நடக்கும், கார்ப்பரேட்டுகளுக்கான கூடுதல் வரி 12%-இருந்து 7% ஆகக் குறையும், டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும்; அதற்கு 30% வரி விதிக்கப்படும் போன்ற அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதேபோல ஏழைகள், நடுத்தர மக்கள் வாங்கும் குடைகளுக்கு வரி உயர்வு, பணக்காரர்கள் வாங்கும் வைரத்திற்கு வரி குறைப்பு.

இது யாருக்கான பட்ஜெட்? ஏழைகளுக்காக பணக்காரர்களுக்கா என நெட்டிசன்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் கேள்வியெழுப்பியுள்ளனர். அந்த வகையில் ஒவ்வொரு பட்ஜெட் தாக்கலின்போதும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் கருத்து முக்கியவத்துவம் பெறும். ஏனெனில் அவரும் பல பட்ஜெட்டுகளை தாக்கல் செய்திருக்கிறார். பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் , "இந்த பட்ஜெட் முழுக்க முழுக்க முதலாளித்துவ பட்ஜெட்டாகவே இருக்கிறது. இதுவரை எந்தவொரு பட்ஜெட்டும் இந்தளவிற்கு பணக்காரர்களுக்கு சாதகமான பட்ஜெட்டை நான் கண்டதே இல்லை.

பட்ஜெட்டில் வரி சலுகை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. சிறு, குறு, நடுத்தர தொழில்களை மீட்க எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. அவர்களுக்கான அறிவிப்புகள் இதில் எதுவும் இடம்பெறவில்லை ஏழை, எளிய மக்கள் நலனுக்கான மானியங்கள் குறைக்கப்பட்டுள்ளன. ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு தீர்வு காணும் அறிவிப்பு இல்லை. மத்திய பட்ஜெட்டில் 2 முறை ஏழைகள் என குறிப்பிட்டு ஏழைகளை மறக்காமல் இருந்ததற்கு நன்றி கூறிக் கொள்கிறேன். நகரங்களில் வேலையின்மை 8.2%ஆகவும் கிராமங்களில் 5.8% ஆகவும் இருக்கிறது. நாட்டின் முன் உள்ள சவால்களை மத்திய நிதி அமைச்சர் அறிந்திருப்பது அவசியம்.

பட்ஜெட்டில் வருமான வரி சலுகையும் இல்லை. நாட்டின் பொது மக்கள் பற்றி பட்ஜெட்டில் எந்த விதமான கவனமும் செலுத்தப்படவில்லை. மக்கள் இது போன்ற பட்ஜெட்டை நிச்சயம் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். 25 வருடங்களுக்கான பட்ஜெட் இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார். ஆனால் அவர்கள் நிகழ்காலத்தை குறித்து திட்டமிட எளிதாக மறந்துவிட்டார்கள். அதை பற்றி எதுவுமே சொல்லவில்லை. 25 ஆண்டுகால திட்டத்தின் பயன்களுக்காக மக்கள் காத்திருக்க வேண்டும் என்பது அதிர்ச்சியாக உள்ளது” என சராமரியாக விமர்சித்துள்ளார்.