×

தொண்டர்கள் எனது பக்கம்; குண்டர்கள் அவர்கள் பக்கம்- ஓபிஎஸ்

 

தொண்டர்கள் நம் பக்கம், குண்டர்கள் அவர்கள் பக்கம்  பாதை மாறி போனால் ஊரு வந்து சேராது ஓபன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி  தொகுதி முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் தலைமையில், அந்த மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள்  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓபன்னீர்செல்வம், “கடந்த 23ஆம் தேதி பொதுக்குழு எப்படி நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். பொதுக்குழு என்றால் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர் தற்காலிக அவை தலைவரை முன்மொழிந்து அதனை எடப்பாடி பழனிச்சாமி வழிமொழிய வேண்டும். ஆனால் நான் மைக் பிடித்து பேச ஆரம்பித்த பொழுது கூச்சல் குழப்பம் அட்டூழியம் அவர்கள் ரவுடி, கேடிகளை வைத்துக்கொண்டு கலவரம் செய்ய ஆரம்பித்தனர். இதில் சி.வி சண்முகம் உடனே எழுந்து வந்து நாங்கள் ஏற்கனவே நிகழ்ச்சி நிரல் படி ஏற்படுத்தி வைத்திருந்த 23 தீர்மானங்களை 23 தீர்மானங்களும் ரத்து என்று சிபி சண்முகம் அறிவித்துவிட்டு சென்றார். எந்த விவாதமும் இல்லை, என்னிடமும் கேட்கவில்லை. பொருளாளர் என்ற முறையில் நான் கணக்கு வழக்கு தாக்கல் செய்ய வேண்டும், அதனையும் என்னை தாக்கல் செய்ய விட வில்லை. எனவே இந்த கூட்டத்தில் கலவரம் ஏற்பட்டு விடும் என்று நான் அருகில் அமர்ந்துள்ள வைத்தியலிங்கம் அவர்களிடம் இந்த பொதுக்குழுவில் பொதுக்குழுவில் இல்லாதவர்கள் ஏராளமானோர் இருப்பதால் நாம் சென்று விடலாம் என்று கூறி அமைதியாக சென்று விட்டோம். 

பின்னர் 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் காஞ்சிபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் இரவு முழுவதும் ரவுடிகளை வைத்துக்கொண்டு மது அருந்தி கேலிக்கூத்துகளில் ஈடுபட்டு வந்திருந்தனர். நாங்கள் அந்த பொதுக்குழுவிற்கு செல்ல வேண்டாம் எனவே தலைமைக் கழகம் சென்று அமர்ந்து விடலாம் என்று சென்ற நிலையில் நிராயுதபாணியாக சென்ற எங்களை தாக்க ஆரம்பித்தது அவர்கள்தான். எனவே இந்த இரு மாபெரும் தலைவர்கள் ஆரம்பித்து வைத்த இந்த இயக்கத்தை உள்ள தொண்டர்கள் நம்பக்கமும் குண்டர்கள் அவர்கள் பக்கமும் உள்ளனர். பாதை மாறி போனால் ஊரு வந்து சேராது என ஏற்கனவே நாம் சேவல் என்று இரண்டு அணிகளாக இருந்த பொழுது முதலில் மக்கள் கொடுத்த அடியை தான் மீண்டும் நமக்கு கொடுப்பார்கள் என்பதால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமே ஒழிய இதில் பிடிவாதம் காட்டக்கூடாது” எனக் கூறினார்.