×

பாஜகவின் உட்கட்சி பிரச்சனையை மறைக்க கருவியாக பயன்படுத்தப்படும் ஈபிஎஸ்

 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “பாஜகவின் உட்கட்சி பிரச்சனையை திசை திருப்ப தன்னை ஒரு கருவியாக பயன்படுத்தி எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து உள்ளாரா என்ற சந்தேகம் எழுகிறது.அவர் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றே தெரிகிறது. ஒருவேளை ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தை நாடி இருக்கலாம். ஆனால் ஆதாரம் இல்லாத காரணத்தால் தான் இப்படி ஆளுநரை சந்தித்திருக்கிறார்.சட்டம், ஒழுங்கு பிரச்சனையை பொறுத்தவரை அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கும் பிரச்சினைகளை எடுத்துக் கொண்டு, மாநிலம் முழுவதுமாய் சீர்குலைந்து விட்டது போல மாயத் தோற்றம் உருவாக்க முயல்கிறார். 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சாத்தான்குளம் தந்தை மகன் கொலை, பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவம் எல்லாம் யார் ஆட்சியில் நடந்ததுரு என்பதை அவர் நினைத்துப் பார்க்க வேண்டும்.தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றிய விசாரணை அறிக்கையில், எடப்பாடி பழனிச்சாமி முழு பூசணிக்காயை சோற்றில் மறைந்த கதை வெளியே வந்துள்ளது. கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவாக என்.ஐ.ஏ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனை ஏற்கனவே தூத்துக்குடியில் ஒரு செய்தியாளர் சந்திப்பு நடந்தி விளக்கினேன்.

மருந்து தட்டுப்பாடு எங்கும் இல்லை. போதிய அளவில் மருந்துகளை கையிருப்பில் வைத்துள்ளனர். அதனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தொடர்ந்து ஆய்வு செய்து உறுதி செய்து வருகிறார்.முதலமைச்சர் தலைமையில் நடக்கும் சிறப்பான ஆட்சி மீது களங்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த குற்றச்சாட்டுகளை மக்கள் நிராகரிப்பார்கள்” எனக் கூறினார்.