×

"நதிநீர் இணைப்புலாம் பழங்கால ஜோக் வேற சொல்லுங்க" - பாஜகவை கிண்டலடித்த கேசிஆர்!

 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரி தொடர்பாக எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. மாறாக, 5ஜி ஏலம் நடக்கும், கார்ப்பரேட்டுகளுக்கான கூடுதல் வரி 12%-இருந்து 7% ஆகக் குறையும், டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும்; அதற்கு 30% வரி விதிக்கப்படும் போன்ற அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 

அதேபோல ஏழைகள், நடுத்தர மக்கள் வாங்கும் குடைகளுக்கு வரி உயர்வு, பணக்காரர்கள் வாங்கும் வைரத்திற்கு வரி குறைப்பு. இது யாருக்கான பட்ஜெட்? ஏழைகளுக்காக பணக்காரர்களுக்கா என நெட்டிசன்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் கேள்வியெழுப்பியுள்ளனர். ஸ்டாலின் உள்ளிட்ட பாஜக ஆளாத மாநில முதலமைச்சர்கள் தங்கள் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். அந்த வகையில் தற்போது தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவும் தன் பங்குக்கு விட்டு விளாசியுள்ளார். இன்று செய்தியாளஎர்களைச் சந்தித்து அவர் பேசினார்.

அப்போது அவர், "மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கோ சாமான்ய மக்களுக்கோ எந்தவித சாதகமான அம்சமும் இல்லை. இது முழுக்க முழுக்க கோல்மால் பட்ஜெட். வார்த்தை ஜாலங்களால் அனைத்தையும் மூடி மறைத்திருக்கிறார்கள். எஸ்சி, எஸ்டி, ஓபிசி மக்கள் பட்ஜெட்டை பார்த்தும் விரக்தி நிலைக்குச் சென்றுவிட்டார்கள். ஏழை மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். விவசாயம் மற்றும் கைத்தறி துறைக்கு இந்த பட்ஜெட்டில் ஒன்றுமில்லை. சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு துறைகளின் வளர்ச்சியை பட்ஜெட் புறக்கணித்துள்ளது.

மகாபாரதத்தை மேற்கோள் காட்டியிருக்கிறார் நிதியமைச்சர். அவர் கூறுவது தர்மம், ஆனால் செய்வதெல்லாம் அதர்மம். தெலங்கானாவின் மருமகள் என கூறிக்கொள்ளும் அவர், இம்மாநிலத்திற்கென ஒரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை. கிருஷ்ணா, கோதாவரி மற்றும் காவிரி நதிகளை இணைக்கும் திட்டம் என்பது பழங்கால ஜோக். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலைப் பெறாமல் அறிவித்துள்ளார். கோதாவரி நதிநீரில் தெலுங்கு மாநிலங்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு என்று பச்சாவத் தீர்ப்பாயம் தீர்ப்பு கூறியுள்ளது. 

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு சமமான தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எப்படி மத்திய அரசால் மீற முடியும்? கிருஷ்ணா, கோதாவரி ஆகிய இரு நதிகளிலும் உபரி நீர் இருப்பு குறித்து அறியாமல் நதிகளை இணைக்க மத்திய அரசு எப்படி இறுதி முடிவுக்கு வந்தது என்பதை தெரிவிக்க வேண்டும்? உபரி நீர் போதுமான அளவு கிடைக்கும் நிலையில், தெலுங்கானா அரசு முன்மொழிந்த பாசனத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்காதது ஏன்? இவ்வாறு பல்வேறு ஏமாற்று திட்டங்களை அறிவித்துள்ளார்கள். ஆகவே பாஜக மத்தியில் இருந்து அகற்றப்பட்டு, வங்கக் கடலில் வீசப்பட வேண்டும்” என்றார்.