×

கடந்த 4 மாதங்களில் 2வது முறையாக பிரதமர் மோடியுடனான சந்திப்பதை தவிர்த்த தெலங்கானா முதல்வர் 

 

கடந்த 4 மாதங்களில் 2வது முறையாக பிரதமர் மோடியுடான சந்திப்பை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தவிர்த்துள்ளார்

தெலங்கானா தலைநகரம் ஹைதராபாத்தில் இண்டியன் ஸ்கூல் ஆப் பிஸினஸ் கல்லூரியில் நடைபெற்ற 20வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, மதியம் 1 மணியளவில் ஹைதராபாத் வந்தடைந்தார். அவரை தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, பாஜக தெலங்கானா மாநில தலைவர் பண்டி சஞ்சய், முன்னாள் எம்பியும், நடிகையுமான விஜயசாந்தி உள்பட பல்வேறு பாஜக  நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை போர்த்தியும்  வரவேற்றனர். 

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் பிரதமர் மோடியை சந்திக்கவில்லை. பிரதமர் மோடியுடனான சந்திப்பை தவிர்க்கும் நோக்கில், மோடி ஹைதராபாத் வருவதற்கு முன்னதாகவே, சந்திரசேகர் ராவ் பெங்களூரு கிளம்பி சென்று விட்டார். முன்னாள் பிரதமர் தேவுகவுடா மற்றும் அவரது மகன் கே.குமாரசாமி ஆகியோரை சந்திக்க சென்றார். கடந்த 4 மாதங்களில் 2வது முறையாக பிரதமர் மோடியுடான சந்திப்பை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தவிர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கு முன் கடந்த பிப்ரவரியில் ஹைதராபாத் வந்த பிரதமர் ராமானுஜாச்சாரியாரின் சமத்துவ சிலை திறந்து வைத்தார். பிரதமர் மோடி ஹைதராபாத் வந்தபோது அவரை விமான நிலையத்துக்கு சென்று கே.சந்திரசேகர் ராவ் வரவேற்கவும் இல்லை, சமத்துவ சிலை திறப்பு விழாவிலும் கே.சந்திரசேகர் ராவ் கலந்து கொள்ளவில்லை. கடந்த ஆண்டு நவம்பரில் பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் கோவிட் தடுப்பூசி உற்பத்தி மையத்தை நேரடியாக சென்று பார்வையிட்டார். அந்த நிகழ்வில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் கலந்து கொள்ளவில்லை. இது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது.