×

ஜெயக்குமாருக்கு கிடைச்ச ரிப்போர்ட்.. 2 மணிக்கு மேல தான் கச்சேரியே இருக்காமே!

 

சட்டப் போராட்டங்களை தாண்டி பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. மாநிலத்திலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் உள்ளிட்ட 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கடம்பூர் பேரூராட்சி தேர்தல் ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்டதால் அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை. தேர்தல் நடப்பதற்கு முன்பே ஆளும் திமுக அராஜகம் செய்யும் என அதிமுக தலைவர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

குறிப்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் மனுவும் கொடுத்தார். இருப்பினும் தேர்தல் அதிகாரிகளை ஆளுங்கட்சி கைக்குள் போட்டு செயல்படுவதாக ஊடகங்களில் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார். இச்சூழலில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குண்டர்கள், ரவுடிகள் முழுமையான அளவிற்கு ஒவ்வொரு தொகுதியிலும் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் நேற்று மனு அளித்தோம். தேர்தல் ஆணையமும் உறுதியளித்தது, அதன்படி தற்போது வரை, தேர்தல் அமைதியாக நடக்கிறது.

எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, திமுகவைப் பொறுத்தவரை இனிமேல்தான் கச்சேரியை ஆரம்பிக்க போகிறது. 2 மணிக்கு மேல் அந்த கச்சேரியை அனைவரும் காண்பீர்கள் என நினைக்கிறேன். கச்சேரியை ஆரம்பிப்பதற்கான முஸ்தீபுகள், முன்னேற்பாடுகள் எல்லாம் செய்துகொண்டிருக்கிறார்கள். தற்போதுகூட கோவையில் பணப்பட்டுவாடா நடந்து கொண்டிருக்கிறது. அண்டா, குண்டா, ஹாட் பேக்ஸ் விநியோகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஓட்டுக்கும் ரூ.500, ரூ.1,000, துறைமுகம் தொகுதியெல்லாம் பணம் அப்படி விளையாடுகிறது” என்றார்.