×

எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின் அதிமுக எழுச்சியுடன் உள்ளது- ஜெயக்குமார்

 

எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின் அதிமுக எழுச்சியுடன் உள்ளது , பன்னீர் செல்வம் கோஷ்டியால் கட்சியின் அனைத்து மாவட்டத்திலும் கூட்டம் நடத்த முடியுமா என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார். 

மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழக முழுவதும் இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை பட்டாளத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர். தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, மின் கட்டண உயர்வுக்கு எதிராக பதாகையை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “திமுக அரசு மக்கள் விரோத அரசாக செயல்படுகிறது. நிதி நெருக்கடி இல்லாத போதும் பேருந்து கட்டணம், பால் கட்டணம் உயர்த்தாமல் நிர்வாகம் செய்தது அதிமுக. ஆனால் திமுக ஆட்சியில் சொத்து வரி, பால் விலை, மின்சாரக் கட்டணம் என அனைத்தும் உயர்த்தப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்த உடனே முதல் கையெழுத்து நீட் விலக்கு என்றனர். அகில இந்தியா அளவில் நீட் தேர்வில் தமிழகத்தில் இருந்து மாணவர்கள் தேர்ச்சி குறைவு. அரசுக்கு எதிராக எத்தனை போராட்டம் நடந்தாலும் காது கொடுத்து கேட்காத விடியா அரசாக உள்ளது.  

மெரினா கடலில் கருணாநிதி நினைவாக பேனா சிலை வைக்க மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளபோதும் அதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது உறுதி. அறிவாலயத்தின் முன்புறம் 10 ஆயிரம் அடியில் கூட தனது செலவில் வைத்து கொள்ளட்டும் கடலில் வைத்து மீனவர்கள் வாழ்வாதாரத்தை ஏன் அழிக்க வேண்டும்? எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின் கட்சி எழுச்சியுடன் உள்ளது, பன்னீர் செல்வம் கோஷ்டியால் கட்சியின் 75 மாவட்டத்திலும் கூட்டம் நடத்த முடியுமா..? பண்ருட்டியார் என்ன சொன்னாலும் சரியான பாதையில்தான் அதிமுக செல்கிறது” என தெரிவித்தார்.