×

மணிப்பூரில் பா.ஜ.க. அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்ப பெற ஐக்கிய ஜனதா தளம் ஆலோசனை

 

மணிப்பூரில் பா.ஜ.க. அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்ப பெற ஐக்கிய ஜனதா தளம் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூரில் முதல்வர் பைரன் சிங் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி இடம் பெற்று வருகிறது. மணிப்பூர் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 60 உறுப்பினர்களில் பா.ஜ.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்களின் பலம் 55ஆக உள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் இடம் பிடித்துள்ளது. முதல்வர் பைரன் சிங் தலைமையிலான அரசுக்கு ஐக்கிய ஜனதா தளம் வெளியில் இருந்துதான் ஆதரவு அளித்து வருகிறது.

பீகாரில் அண்மையில் முதல்வர் நிதிஷ் குமார் பா.ஜ.க. கூட்டணியை முறித்து கொண்டு, ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணியில் இணைந்து புதிய ஆட்சியை அமைத்தார். இந்த சூழ்நிலையில், மணிப்பூர் மாநிலத்திலும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறும் என பேச்சு எழுந்துள்ளது. செப்டம்பர் 3-4ம் தேதிகளில் நடைபெற உள்ள ஐக்கிய ஜனதா தள கட்சி கூட்டத்தில் இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதேசமயம், மணிப்பூரில் பா.ஜ.க. அரசுக்கு அளித்து வரும் ஆதரவை ஐக்கிய ஜனதா தளம் வாபஸ் பெற்றாலும், அதனால் பா.ஜ.க. அரசுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படபோவதில்லை. ஏனென்றால் அம்மாநில சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு தேவையான 31ஐ காட்டிலும் பா.ஜ.க.வுக்கு கூடுதல் பலம் உள்ளது. மேலும், ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியிலிருந்து வெளியேறினாலும் பா.ஜ.க. கவலைப்படாது.