×

மோடியும், பா.ஜ.க.வும் வெட்கமின்றி தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் எந்த வாய்ப்பையும் இழக்க மாட்டார்கள்.. காங்கிரஸ்

 

ஜி20  கூட்டமைப்பின் இந்திய தலைமைக்கான லோகோவை குறிப்பிட்டு, மோடியும், பா.ஜ.க.வும் வெட்கமின்றி தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் எந்த வாய்ப்பையும் இழக்க மாட்டார்கள் என்பதை நாம் அறிவோம் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார்

உலகின் பெரும் பொருளாதார மதிப்பை கொண்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி20  கூட்டமைப்பின் இந்திய தலைமைக்கான தலைமை பொறுப்பை டிசம்பர் 1ம் தேதி இ்ந்தியா ஏற்கவுள்ளது. ஜி20  கூட்டமைப்பின் இந்திய தலைமைக்கான லோகோ, கருத்துரு, வலைத்தளம் ஆகியவற்றை பிரதமர் நேற்று முன்தினம் வெளியிட்டார். லோகோவில் தாமரை இடம் பெற்றிருப்பதை காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில், 70 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கொடியை இந்தியாவின் கொடியாக மாற்றும் திட்டத்தை நிராகரித்தார். இப்போது பா.ஜ.க.வின் தேர்தல் சின்னம் (தாமரை)  ஜி20ன் இந்தியாவின் தலைமை பதவிக்கான அதிகாரப்பூர்வ சின்னமாக மாறியுள்ளது. அதிர்ச்சியளிக்கும் அதேவேளையில், மோடியும், பா.ஜ.க.வும் வெட்கமின்றி தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் எந்த வாய்ப்பையும் இழக்க மாட்டார்கள் என்பதை நாம் அறிவோம் என பதிவு செய்துள்ளார்.

ஜெய்ராம் ரமேஷின் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது. மத்திய அரசின் தகவல் மற்றம் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் கஞ்சன் குப்தா டிவிட்டரில், 70 ஆண்டுகளுக்கு முன்பு ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது தாமரை இந்தியாவின் தேசிய மலராக அறிவிக்கப்பட்டது. ஜெய்ராம் ரமேஷ் உங்களுக்கும் அது அதிர்ச்சியாக இருக்கிறதா?. தொடர்ந்து காங்கிரஸ் அரசுகள் தாமரை சின்னத்துடன் கரன்சி நாணயங்களை வெளியிட்டன. தேசிய சின்னம் தாமரையின் மேல் நிற்கிறது என பதிவு செய்துள்ளார்.