×

"ஜெயிச்சிட்டு கட்சி தாவுனா ஒரே வெட்டு தான்" - அதிமுக ஒன்றியம் அடாவடி.. கலவரமான கட்சி மீட்டிங்!

 

மக்களவை தேர்தல், சட்டப்பேரவை தேர்தல் என மிகப்பெரிய தேர்தல்கள் அனைத்தும் வெறும் டிரெய்லர் போல தான். எப்போதுமே அதிரடி ஆக்‌ஷன்கள் நிறைந்த மெயின் பிக்சர் தேர்தல் என்றால் அது உள்ளாட்சி தேர்தல் தான். ஒரு கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடிய சர்வ சக்தியும் இந்தத் தேர்தலுக்கே உண்டு. அரசியல் கட்சிகளின் பலம் வார்டுகளின் பலத்தில் தான் இருக்கிறது. இன்றளவும் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக கோலோச்சிக் கொண்டிருக்கவும், எத்தனை பெரிய தோல்விகளைக் கண்டாலும் மீண்டெழவும் காரணம் வார்டுகள் தான். 

உள்ளாட்சி தேர்தலில் அதீத கவனம் செலுத்தி, பெரும் சிரத்தையுடன் தேர்தலை கட்சிகள் எதிர்கொள்ளும். தமிழ்நாட்டின் ஆணிவேரான உள்ளாட்சி தேர்தலின் அடுத்த வடிவமான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. எப்போதுமே வார்டு கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்கும் நேரடி தேர்தலை விட தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தலில் தான் ஆக்‌ஷன் காட்சிகள் நிரம்பியிருக்கும். கடைசி நொடியில் கூட திமுகவில் போட்டியிட்டு ஜெயித்தவர்கள் அதிமுக தலைவர் வேட்பாளருக்கு மாற்றி வாக்களித்துவிடுவார்கள்.

அதேபோல அதிமுகவில் ஜெயித்தவர்களும் திமுகவுக்கு வாக்களிப்பார்கள். இதுபோன்ற பல்வேறு நிகழ்வுகளை தமிழ்நாடு சந்தித்திருக்கிறது. அந்த வகையில் இவ்வாறு கட்சி தாவுபவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார் அதிமுக கட்சி நிர்வாகி. விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் சாத்தூர் நகர்மன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம், விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி, “அதிமுகவில் இரட்டை இலையில் ஜெயித்து எந்த கவுன்சிலர் கட்சி மாறினாலும் அவரை வீடுபுகுந்து வெட்டுவேன். 


மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன்கிட்ட சொல்லிட்டு வெட்டுவேன். என் வெட்டுதான் முதல் வெட்டாக இருக்கும். எவர் கட்சி மாறுகிறாரோ, கட்சியை வைத்து ஜெயித்துவிட்டு,  எவரவர் கட்சி மாறுகிறார்களோ, அவருடைய போஸ்ட்மார்ட்டம் அரசு மருத்துவமனையில்தான் நடக்கும். இப்பவே நான் சொல்கிறேன். இந்தப் பேச்சால், என் மேல் கேஸ் கொடுத்தாலும் பிரச்சனை இல்லை. இரட்டை இலையில் ஜெயிச்சுட்டு கட்சி மாறி போனால், உங்க ஆத்தாகிட்ட வாய்க்கரிசி வாங்கிட்டு போங்க” என நாக்கு மேல் பல்லு போட்டு பேசிவிட்டார். கூட்டத்தில் இருந்தவர்கள் அதிர்ந்து போய்விட்டார்கள்.