×

"மனநலம் குன்றிய திமுக அரசு; பாஜகவுக்கு ஓட்டு போடலேனா மகா பாவம்" - திருச்சியை திணறடித்த ஹெச்.ராஜா!

 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரபர கிளைமேக்ஸை எட்டியுள்ளது. தலைவர்கள் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரச்சாரத்தில் அனல் பறக்கிறது. கலகலப்பாக சென்றாலும் அவ்வப்போது சர்ச்சைகளும் சேர்ந்தே எழுகின்றன. அந்த வகையில் பாஜக தலைவர் ஹெச்.ராஜா எப்போதுமே வாய் துடுக்காக பேசுவார். அவரின் பேச்சு சமூக வலைதளங்களில் கவனம் பெறும். எதிர்க்கட்சியினரை பார்த்து சாபமும் விடுவார். இப்போதும் சாபம் விட்டிருக்கிறார். திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் மற்றும் அதன் சுற்றியுள்ள வார்டுகளில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

அப்போது பேசிய அவர், "திமுக ஆட்சிக் காலத்தில் ரவுடித்தனம் செய்கிறார்கள். கோயில்களை இடிக்கிறார்கள். கடந்த 55 வருடங்களாக  இப்படி மாறி மாறி இவர்கள் ஆட்சி செய்துள்ளார்கள். தர்மத்தைக் காக்க இந்த முறை பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள். இந்துக்களுக்கு எதிரான அரசாக திமுக அரசு செயல்படுகிறது. அரசின் நிர்வாகம் முழுவதும் மதமாற்றம் நபர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இந்துக் கோயில்கள் அனைத்தும் இடிக்கப்படுகிறது. 1967ஆம் ஆண்டிலிருந்து வந்த தீயசக்திகள் இந்துக்களுக்கு மட்டுமே எதிராக செயல்படுகிறது. 

1,000க்கும் மேற்பட்ட சர்ச்சுகள், மசூதிகள் நீர்நிலைகளில் உள்ளன. அதை முடிந்தால் அப்புறப்படுத்துங்கள். இந்த திமுக சர்க்கார் அவல சர்க்காராக செயல்படுகிறது. இந்துக்களின் உணர்வுகளோடு விளையாட வேண்டாம். வெறும் இரண்டரை சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளீர்கள் தூக்கி எறிய வெகு நாள் ஆகாது. ஊழலும் திமுகவும் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் அதிலிருந்து அவர்களை பிரிக்க முடியாது.  நீங்கள் ஒன்றிய அரசு என்று சொல்லும் பொழுது நாங்கள்  மனநலம் குன்றிய அரசு என்று சொல்வோம். 

தடுப்பூசி மூலம் நம்மை காப்பாற்றியவர் பிரதமர் மோடி. அவருக்கு நன்றி தெரிவிக்க தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். தாமரைக்கு வாக்களிக்காமல் வேறு யாருக்காவது வாக்களித்தீர்கள் என்றால் மகா பாவம் என நான் சொல்லவில்லை திருவள்ளுவர் சொல்லி உள்ளார். 'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு' என்ற திருக்குறளே அதற்கு சாட்சி. நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றால் தேங்க்யூ மோடி தேங்க்யூ மோடி என சொல்லிக்கொண்டே தாமரை சின்னத்திற்கு வாக்களியுங்கள். அது மோடிக்கு போய் சேரும்” என்றார்..