×

வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ராகுல் காந்தி.. நேர்மையின் முன் மண்டியிடும் ஊழல்.. பா.ஜ.க. விமர்சனம்

 

ராகுல் காந்தி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தியதை, நேர்மையின் முன் மண்டியிடும் ஊழல் என்று பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கவுரவ் பாண்டி கடந்த சில தினங்களுக்கு முன், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயை பிரிட்டிஷ் இன்பார்மர் என கடுமையாக விமர்சனம் செய்தார். கவுரவ் பாண்டி கூறுகையில், சுதந்திர போராட்டத்தின்போது, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை வாஜ்பாய் புறக்கணித்தார். அந்த இயக்கத்தில் கலந்து கொண்டவர்கள் குறித்து தகவலை தெரிவித்து பிரிட்டிஷ் இன்பார்மராக வாஜ்பாய் செயல்பட்டார் என்று  குற்றம் சாட்டினார். 

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேற்று டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடமான  ஸதைவ அடலுக்கு சென்று மரியாதை செலுத்தினார். இது டெல்லி அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் வாஜ்பாய் நினைவிடத்துக்கு ராகுல் காந்தி சென்றதை பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது. பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறியதாவது: நேர்மை, தேசத்திற்கான அர்ப்பணிப்பு மற்றும் அமைதியின் தூதுவர்  அடல்ஜி. ஸதைவ அடலில் ராகுல் காந்தி மரியாதை செலுத்தியது என்பது நேர்மையின் முன் மண்டியிடும் ஊழல். 

வாஜ்பாய் கற்பித்த பாதையில் அவர் நடந்தாரா? இந்தியாவை அவதூறு செய்வதிலிருந்து நாட்டை துண்டாட நினைக்கும் கும்பலை ஆதரிப்பது மற்றும் வெறுப்பை மட்டுமே ராகுல் காந்தி பரப்புகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார். மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் கூறுகையில், காங்கிரஸ்காரர்கள் ஆதாரமற்ற கருத்துக்களை தெரிவித்தனர். இந்திய பாரம்பரியத்தில் ராம ஜென்ம பூமி உள்ளது பாபர் மசூதி அல்ல. ராம் ஜென்ம பூமியை பாபர் ஆக்கிரமித்தார். அங்கு கோயில் அமைய வேண்டும் என்று அடல் ஜி  விரும்பினார்.