×

என் உயிர் உள்ளவரை இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன்! அதிமுக தொண்டர்களுக்கு ஈபிஎஸ் கடிதம்

 

அதிமுக பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு மடல் ஒன்றை எழுதியுள்ளார்.

 

அதில், “நாம் அனைவரும் உயிரினும் மேலாக மதித்துப் போற்றிவரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன்விழா ஆண்டை உங்களை இந்த மடல் வழியாக சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் ஒட்டி, "இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்,இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என்று வாழ்ந்து மறைந்த மனிதப் புனிதர், பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கம் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். இவ்வியக்கத்தின் பொன்விழா ஆண்டில் பயணிக்கும் தலைமைக் கழகச் செயலாளர்கள் முதல் இந்த இயக்கத்தின் ஆணி வேராகவும், இயக்கம் இயங்கும் இதயமாகவும் விளங்கும் கிளைக் கழகச் செயலாளர்கள், கழகத் தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளையும், நல்வாழ்த்துகளையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

 “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தில் இருந்தால், நம்மால் மக்கள் செல்வாக்கைப் பெற முடியாது” என்று எண்ணிய தீய சக்தி திரு. கருணாநிதி, பொய்யான காரணங்களைச் சொல்லி புரட்சித் தலைவரை தி.மு.க-வில் இருந்து வெளியேற்றினார். அதன் பின்னர், புரட்சித் தலைவர் அவர்கள் 17.10.1972 அன்று 'அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி, திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தல், கோவை மேற்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல், புதுச்சேரி மாநில சட்டமன்ற இடைத் தேர்தல் முதலானவற்றில் மகத்தான வெற்றி பெற்று சாதனை படைத்த நிலையில், புரட்சித் தலைவர் அவர்கள் கட்சியின் பெயரை 16.05.1976 அன்று “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என பெயர் மாற்றம் செய்தார். 

இந்நிலையில், மக்களுக்காகவே இந்த இயக்கம் செயல்பட்டு வருவதை உணர்ந்து, உண்மையான மக்கள் தலைவர் புரட்சித் தலைவர்தான் என்பதை ஏற்றுக்கொண்ட மக்கள், 1977 முதல் 1987-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து மூன்று முறை, புரட்சித் தலைவர் இருக்கின்ற வரை முதலமைச்சர் நாற்காலியின் பக்கம் திரும்பிக்கூட பார்க்க இயலாத வண்ணம் திமுக-வை தமிழக மக்கள் அடியோடு ஒதுக்கி வைத்திருந்தனர். புரட்சித் தலைவருக்குப் பிறகு கழகத்திற்கு தலைமை ஏற்ற மாண்புமிகு அம்மா அவர்கள், "மக்களால் நான், மக்களுக்காகவே நான்" என்ற தவ வாழ்வை மனதில் நிறுத்தி பெண்களின் முன்னேற்றமே இந்த நாட்டின் முன்னேற்றம் என்பதை சொல்லிலும், செயலிலும், ஒவ்வொரு நேர்விலும் முனைப்போடு பணியாற்றி, சரித்திரச் சாதனைகள் புரிந்ததை இந்திய துணைக் கண்டம் மட்டுமல்ல, உலகமே போற்றிப் பாராட்டிய நிகழ்வுகள் பல உண்டு. இந்த இயக்கத்தின் நலனுக்காகவும், மக்களின் நலனுக்காகவும், கட்சியிலும், ஆட்சியிலும் எந்தவிதமான சமரசமும் இல்லாமல் தன்னுடைய வாழ்நாள் இறுதிவரை வாழ்ந்திட்ட சரித்திரச் சாதனையாளர் மாண்புமிகு அம்மா அவர்கள். இந்த நேரத்தில் நம்மிடையே இருபெரும் தலைவர்களும் இல்லையென்றாலும், அவர்களுடைய நல்வாழ்த்துகளோடு, அவர்கள் எண்ணிய பாதையை நெஞ்சில் நிறுத்தி, இந்தப் புனித பொன்விழா ஆண்டில் பயணிப்போம்.

கழகம் தொடங்கி, நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தப் பொன் விழா ஆண்டில், இயக்கம் சந்தித்த சோதனைகள், துன்பங்கள், துயரங்கள், துரோகங்கள், எதிர்ப்புகள் இவை அனைத்தையும் வென்றெடுத்து, கழகத்தின் இதயமாக விளங்கிக் கொண்டிருக்கும் கிளைக் கழகச் செயலாளர்கள் முதற்கொண்டு கழகத்தின் அடிமட்டத் தொண்டர்கள் உட்பட அனைத்து நிர்வாகிகளின் ஒத்துழைப்போடும் கழகம் பொன்விழா ஆண்டில் பீடுநடை போட்டு வருகிறது. இந்த 50 ஆண்டுகளில், ஏறத்தாழ 33 ஆண்டுகள் ஆட்சி செய்த, இந்திய துணைக் கண்டத்தின் மாபெரும் மக்கள் இயக்கம் நம்முடைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே என்பதில் பெருமிதம் கொள்வோம்.

கழகத்தின் அடிமட்டத் தொண்டர்கள் கூட கழகத்தின் தலைமைப் பொறுப்பிற்கும். அரசின் தலைமைப் பதவிக்கும் வர முடியும் என்று சொன்னால் அது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் மட்டுமே சாத்தியம். அதற்கு மிகப் பெரிய உதாரணம், கிளைக் கழகச் செயலாளர் முதல் ஒன்றியப் பொறுப்புகளிலும், மாவட்டக் கழகச் செயலாளர், கழக கொள்கை பரப்புச் செயலாளர் கழக தலைமை நிலையச் செயலாளர் ஆகிய பொறுப்புகளையும்; சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர். தமிழக அரசின் அமைச்சர், தமிழக அரசின் முதலமைச்சர் ஆகிய பதவிகளையும் வகித்ததோடு, தற்போது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும், உங்களின் பேராதரவோடு கழகத்தின் இடைக்காலப் பொதுச் செயலாளராகவும் பணியாற்றி வரும் நானே ஒரு மிகச் சிறந்த உதாரணம்.

இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பூரண நல்லாசியோடும் உங்களின் துணையோடும் கழகத்தை வழிநடத்தி வருவதோடு. கடந்த நான்கரை ஆண்டுகள் கழக ஆட்சியையும் மாண்புமிகு அம்மா அவர்களின் அடியொற்றி, அடிபிறழாமல் மக்கள் நலன் ஒன்றை மட்டுமே மனதில் கொண்டு நம் இருபெரும் தலைவர்களின் எண்ணங்களை ஈடேற்றுகின்ற விதமாக நல்லாட்சியை மக்களுக்குத் தந்தோம். அதை இன்றுவரை மக்களே எண்ணிப் பார்த்து பெருமிதம் அடைவதையும் நேரில் காண்கிறோம்.

மாண்புமிகு அம்மா அவர்களால், இந்த இயக்கத்தால் பதவி சுகங்களை அனுபவித்தவர்கள், இந்த இயக்கம் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிடக்கூடாது என்று நம்முடனே பயணம் செய்த, கண்ணுக்குத் தெரியாத துரோகிகள், எதிர் நின்று களமாடிய புறவாசல் தி.மு.க. ஆகியவற்றால் மிகச் சொற்பமான வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சிக் கட்டிலை நாம் இழந்தோம். தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தோமே தவிர, நாம் கொண்ட கொள்கைகளிலும், கோட்பாடுகளிலும், இருபெரும் தெய்வங்களின் எண்ணங்களை ஈடேற்ற வேண்டும் என்ற பயணத்திலும் நாம் தோற்கவில்லை.

தங்களுடைய எண்ணம் ஈடேறவில்லை, தங்களுக்கும் தங்களுடைய வாரிசுகளுக்கும் எதிர்பார்த்த பதவிகள் கிடைக்கவில்லை என்று இடம் மாறிய தலைவர்கள்தான் உண்டே தவிர, "நான் ஏற்றுக்கொண்ட இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், என் உயிர் உள்ளவரை என் தலைவர்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா” என்று வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே ஒரு தொண்டர் கூட இந்த இயக்கத்தைப் புறந்தள்ளி மாற்று இயக்கத்திற்குச் சென்றதில்லை. இதுதான் இந்த இயக்கத்தின் அசைக்க முடியாத மாபெரும் சக்தி. அந்த சக்தியோடு 17 லட்சம் தொண்டர்களாக இருந்த இந்த இயக்கத்தை ஒன்றரை கோடித் தொண்டர்கள் உள்ள இயக்கமாக வளர்த்தெடுத்த மாபெரும் சக்திதான் நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.

மாண்புமிகு அம்மா அவர்கள் அடிக்கடி சொல்வது, "அரசியல் பயணம் என்பது மலர் பாதையாக ஒரு போதும் இருக்காது. அது, கற்களும், முட்களும் உள்ள ஒரு கரடுமுரடான பாதையாகத் தான் இருக்கும். அதில் ஏற்படும், துன்பங்களையும், துயரங்களையும் தலைவர்கள் உள்வாங்கிக்கொண்டு அதை வெளிக்காட்டாமல் மக்கள் நலன் ஒன்றை மட்டுமே மனதில் நிறுத்தி பணியாற்ற வேண்டும்" என்பார். அதையே என்னுடைய வேத வாக்காக எடுத்துக்கொண்டு, நம் இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடும், உங்களின் பேராதரவோடும், என் உயிர் உள்ளவரை இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன் என்றும், இந்த இயக்கத்தை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தே தீருவேன் என்றும் உளப்பூர்வமாக உறுதி ஏற்று, இந்தப் பொன்விழா ஆண்டை மனமகிழ்வோடும், உற்சாகத்தோடும் கொண்டாடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.