×

எடப்பாடியின் ஆட்கள் நமக்கு எதிராக இருக்கிறார்கள் - மோடியிடம் புகார் வாசித்த மூத்த நிர்வாகி

 

அதிமுக பிரச்சனை தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதால்  சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் இருவரையும் பிரதமர் சந்தித்து பேசப் போவதில்லை என்று முன்கூட்டியே தகவல் பரவியது.  எடப்பாடியும் ஓபிஎஸ்சும் கிண்டி ஆளுநர் மாளிகையில் பிரதமரை தனித்தனியாக சந்தித்து பேச போகிறார்கள் என்று பேச்சு பரவிய நிலையில் தான் இப்படி ஒரு பேச்சு பரவியது.

 அதே மாதிரி சென்னை வந்த பிரதமர் மோடி,  எடப்பாடியையும் ஓபிஎஸ்சையும் தனித்தனியாக சந்தித்து பேசவில்லை. தனித்தனியாக மட்டுமல்ல நேரில் அழைத்து பேசவே இல்லை.  ஆளுநர் மாளிகையில் நேற்று முன்தினம் இரவு எடப்பாடி, ஓபிஎஸ்  இருவருமே பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டிருந்தார்கள்.  ஆனால் கடைசி வரைக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.   அதற்கு பதிலாக சென்னை வரும் போது பிரதமரின் வரவேற்பு நிகழ்வில் எடப்பாடி பழனிச்சாமியும்,   பிரதமர் சென்னையிலிருந்து புறப்படும் வழியனுப்பும் நிகழ்வில் பன்னீர்செல்வமும் பங்கேற்றனர்.

 எடப்பாடியையும் ஓபிஎஸ்சையும் அழைத்து பிரதமர் பேசவில்லையே தவிர ,  இருவர் குறித்தும் அதிமுக விவகாரம் குறித்தும் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்தி இருக்கிறார். 

 நேற்று முன் தினம் இரவில்  பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, அண்ணாமலை உள்பட தமிழக பாஜக நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனையில்  தமிழக அரசியல் சூழல் குறித்த பேச்சு வந்த போது அதிமுகவின் விவாகாரம் குறித்து கேட்டிருக்கிறார் பிரதமர். 

அதிமுகவில் எடப்பாடியின் கை ஓங்கி இருக்கிறது.   ஆனால் அது நமக்கு எந்த விதத்திலும் பிரயோஜனம் இல்லை.  ஏனென்றால் எடப்பாடி இடம் இருப்பவர்களில் பலர் பாஜகவிற்கு எதிரான எண்ணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.   தமிழகத்தில் பாஜக வளர்வதையும்  அண்ணாமலைக்கு மக்களிடம் செல்வாக்கு பெருகுவதையும் அவர்கள் விரும்பாதவர்களாக இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார் ஒரு மூத்த நிர்வாகி.

 மேலும்,  அதிமுகவில் ஏற்படும் பிளவுகள் வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு தான் சாதகமாக  போகும் என்று ஒரு மூத்த நிர்வாகி சொல்லி இருக்கிறார்.   அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட பிரதமர் ,  தமிழக மக்கள் பாஜகவை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கின்றார்கள் என்று மட்டும் தெரிகிறது.   அதனால் அதை உணர்ந்து கட்சி பணிகளை தெளிவுபடுத்துங்கள் என்று சொல்லி இருக்கிறார் .   மற்றபடி எடப்பாடி, ஓபிஎஸ்  விவகாரம் குறித்து அவர் மேற்கொண்டு எந்த பதிலும் சொல்லாமல் இருந்திருக்கிறார்.