×

கூட்டணி கட்சிகள் இடையே பிரிவினையை ஏற்படுத்த பாஜக முயற்சி - துரை வைகோ

 

பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை கொண்டு தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு எதிராக களத்தில் ஒற்றுமையாக உள்ள கட்சிகள் இடையே பிரிவினையை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்கிறது. இந்த முயற்சி ஒருபோதும் தமிழகத்தில் பலிக்காது என மதிமுகவின் அமைப்பு செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் அருகே சோழபுரத்திற்கு திருமண நிகழ்ச்சிக்காக வந்த மதிமுகவின் அமைப்புச் செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது, இந்த தீர்ப்பினை கொண்டு தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு எதிராக ஒற்றுமையுடன் களத்தில் உள்ள கூட்டணி கட்சிகள் இடையே பிரிவினையை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்கிறது. பாஜகவின் இந்த முயற்சி தமிழகத்தில் எடுபடாது. மேலும் இந்தத் தீர்ப்பு, மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் சட்டமியற்றும் உரிமை உண்டு. உச்சநீதிமன்றம் சம்மட்டி அடி தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறதே என கேட்டதற்கு இதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு சட்டரீதியாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலைகளை ஒன்றிய அரசு சமீபத்தில் குறைத்துள்ளது. மாநில அரசும் குறைக்க வேண்டும்.  ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை கடந்த 2014 ஆம் ஆண்டு நிலைக்குக் கொண்டு சென்றால் ,மாநில அரசு நிச்சயமாக பெட்ரோல் டீசல் விலை குறைக்க நடவடிக்கை எடுக்கும். பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் வரிகளில் பெரும்பங்கு ஒன்றிய அரசுக்கே  சென்றுவிடுவதால் பெட்ரோல் டீசல் விலைகளை ஒன்றிய அரசு தான் குறைக்க வேண்டும்” என தெரிவித்தார்.