×

அதே விமர்சனம் இன்றைய அரசுக்கும் பொருந்தும் தானே? முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக கேள்வி

 


“அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம், அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது?” -கடந்த 2019, செப்டம்பர் மாதம்  12ம் தேதியன்று பேனர் விழுந்து விபத்தில் சிக்கிய சுபஸ்ரீ மரணத்தின் போது இந்த விமர்சனங்களை முன் வைத்தவர் அன்றைய தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் .

தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி இதை குறிப்பிட்டு, மேற்கொண்டு தஞ்சாவூர் தேர்விபத்து குறித்து தனது கருத்தினை பதிவிடுகிறார்.  ’’நேற்று தஞ்சாவூர் களிமேடு அப்பர் கோவில் தேர் சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது 11 பேர். 15 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், இது ஒரு விபத்து தான் என்றும், அனுமதியின்றி தேர் திருவிழா நடந்தது என்றும்,  அதனால் அரசை விமர்சிக்கக்கூடாது என்றும் சொல்கிறது தி மு க அரசு.

தகவல் தெரிவிக்கவில்லை, அனுமதி பெறவில்லை என்று அரசு கூறுவது ஏற்கத்தக்கதல்ல. கடந்த நூறு வருடங்களாக நடைபெறும் இந்த திருவிழாவுக்கு  பாதுகாப்பு வழங்குவது அந்த சரகத்தை சேர்ந்த காவல்துறையின் கடமை. தேர் திருவிழாவில் பொது மக்கள் கூடுவார்கள் என்ற அடிப்படையில், பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை  ஆகிய துறைகளோடு முன்கூட்டியே கலந்தாலோசித்து சாலைகளை சீரமைப்பது, மின்சார இணைப்பை துண்டிப்பது உள்ளிட்ட உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டிய பொறுப்பு அரசினுடையது. சட்டமும் அதை தான் சொல்கிறது. அதில் தவறிருந்தால் அதற்கான முழு பொறுப்பையும் தொடர்புடைய அரசு துறை அதிகாரிகளே ஏற்றுக்கொள்ள வேண்டும்.   விழா அமைப்பினர் தகவல் தரவில்லை, அனுமதி பெறவில்லை என்பது பழியிலிருந்து தப்பித்து கொள்ளும் முயற்சியே என்கிறார் நாராயணன்.

இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது? என்று நீங்கள் கேட்ட அதே கேள்வியை தான் கேட்கிறோம். ஆளும் திராவிட முன்னேற்ற கழக அரசு தான் 11 பேர் மரணத்திற்கு காரணம் என்று நாம் கூறவில்லை. ஆனால், இந்த கொடிய நிகழ்விற்கு காரணமான அலட்சியமிக்கவர்கள் மீது, பொறுப்பில்லாதவர்கள் மீது,  கையாலாகாதவர்கள் மீது, அதிகார மமதையால் நடைபெற்ற  அராஜகத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே வலியுறுத்துகிறோம். 
“அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம், அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது?” என்ற அரசின் மீதான அன்றைய எதிர்க்கட்சி தலைவரின் விமர்சனம் சரியென்றால், அதே விமர்சனம் இன்றைய அரசுக்கும் பொருந்தும் தானே?