×

சென்னை மாநகராட்சியில் தோழமைகளுக்கு 37 வார்டுகள்... திமுக எத்தனை தொகுதியில் போட்டி?

 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. நாளை தான் வேட்புமனு தாக்கல் செய்ய இறுதிநாள். ஆனால் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே வார்டு பங்கீடு விவகாரம் இன்னும் இழுபறியாகவே இருந்து வருகிறது. அதிமுக கூட்டணியில் எந்தப் பிரச்சினையுமில்லை. பாஜகவும் அதிமுகவும் தனித்து போட்டியிடுகின்றன. அதேபோல அவர்கள் கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகள் அதிமுக கொடுப்பதை வாங்கிவிட்டு அமைதி காக்கிறார்கள். ஆனால் திமுக கூட்டணியில் தான் குடுமிபிடி சண்டை நடந்து கொண்டிருக்கிறது.

வார்டு பங்கீட்டில் கட்சியின் தலைமை அல்லாமல் அடிமட்ட அளவிலான  நிர்வாகிகள் முடிவெடுப்பதால் கூட்டணி கட்சியினரிடையே தாழ்ந்து போவதில்லை. கூட்டணிக் கட்சிகளும் கொடுப்பதை வாங்குவதில்லை. தங்களுக்கு இருக்கும் செல்வாக்குக்கேற்ப இத்தனை வார்டுகள் வேண்டும் என அடித்து பேசுகிறார்கள். கொடுத்தால் கொடுங்கள் இல்லையெனில் தனித்து போட்டியிடுகிறோம் என மிரட்டுகிறார்கள். ஆளுங்கட்சி என்பதால் திமுக நிர்வாகிகளும் கைகழுவி விடுகிறார்கள். இதனால் பல்வேறு இடங்களில் அதிருப்தி நிலவுகிறது.

எது எப்படியாகினும் சென்னை மாநகராட்சி இந்த தேர்தலில் மிக முக்கியவத்துவம் வாய்ந்த ஒன்று. ஆகவே இதுகுறித்த பேச்சுவார்த்தை தலைமையின் மேற்பார்வையில் நடைபெறுகிறது. இதனால் சுமுகமான முடிவு எட்டப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. அதில் 6 வார்டுகளை விசிக வாங்கிவிட்டது. ஆனால் விசிக இரண்டு இலக்க வார்டுகளை கேட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் ஆறை கொடுத்து ஆப் செய்துள்ளது திமுக. இதுபோக இடதுசாரிகள், காங்கிரஸ் என மற்ற தோழமை கட்சிகளுக்கு 31 வார்டுகளை ஒதுக்கியுள்ளதாகவும் திமுக 163 வார்டுகளில் போட்டியிடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.